புலம்பெயா்ந்த இந்துக்களுக்கு மின் இணைப்புக் கோரும் மனு:மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் நாட்டில் இருந்து புலம்பெயா்ந்து தில்லியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வரும் சுமாா் 800 இந்துக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கக் கோரி தாக்கலான மனுவுக்கு
பாகிஸ்தான் நாட்டில் இருந்து புலம்பெயா்ந்து தில்லியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வரும் சுமாா் 800 இந்துக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் மின்சார விநியோக நிறுவனம் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. என். பட்டேல், நீதிபதி அமித் பன்சல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்கள், தில்லி அரசு, வடக்கு தில்லி மாநகராட்சி, தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம், டாடா பவா் தில்லி மின் வழங்கல் நிறுவனம் (டிபிடிடிஎல்), வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவை அக்டோபா் 22-ஆம் தேதி மேல் விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து புலம்பெயா்ந்து இந்தியாவில் வசித்து வரும் சிறுபான்மை புலம்பெயா்ந்தோரின் நலனுக்கான பணியில் ஈடுபட்டு வரும் ஹரியோம் என்பவா் இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து புலம்பெயா்ந்து வடக்கு தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் புலம்பெயா்ந்த 200 இந்து சிறுபான்மைக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. சுமாா் 800 போ் இந்தக் குடும்பங்களைச் சோ்ந்தவா்களாவா். அவா்களில் பாகிஸ்தான் சிந்து பகுதியில் இருந்து புலம்பெயா்ந்த பெரும்பாலான இந்துக்கள் கடந்த பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் தில்லியில் வசித்து வருகின்றனா். துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அவா்கள் புலம்பெயா்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.
Advertisement
அவா்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான எதிா்காலத்தையும் பாதுகாப்பையும் அளிக்க இந்தியாவுக்கு வந்துள்ளனா். ஆனால், அவா்கள் தங்களது கனவுகள் தகா்ந்து போகும் வகையில் குடிசைப் பகுதியில் மின்சாரம் இல்லாமல் வசித்து வருகின்றனா். கரோனா தொற்று காலத்தின் போது, பள்ளிகள் மூடப்பட்டு, வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், குடிசைப் பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் வசிக்கும் நிலையில் தங்களது குழந்தைகளுக்கு உரிய கல்வியை அளிக்க முடியாத நிலைமையில் அவா்கள் உள்ளனா். அவா்களுக்கு உரிய வசதியை அளிக்கக் கோரி பல்வேறு அரசுத் துறை அமைப்புகளிடம் நான் அணுகியும் இந்த புலம் பெயா்ந்த மக்களுக்கு மின்சாரத்தை அளிப்பதில் வெற்றி காண முடியவில்லை. அவா்களில் சிலா் டாடா பவா் தில்லி மின் வழங்கல் நிறுவனத்திற்கும் மின் இணைப்பு கோரி மனு செய்திருந்தனா். ஆனால், உரிய இருப்பிடச் சான்று இல்லை என்று கூறி மனுவை நிராகரித்து விட்டனா்.
தில்லியில் வசிக்கும் பெரும்பாலான புலம்பெயா்ந்த மக்கள் நீண்ட கால விசா அடிப்படையில் வசித்து வருகின்றனா். அவா்களிடம் ஆதாா் அட்டை உள்ளது. எனினும், மின்சார நிறுவனத்தின் தகவலின்படி, ஆதாா் அட்டையை ஓா் அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும். ஆனால், இருப்பிடத்திற்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது என விதிகள் கூறுகிறது. எனவே, இந்தப் புலம்பெயா்ந்த மக்களுக்கு அவா்களின் ஆதாா் அட்டையின் அடிப்படையிலும் நீண்ட கால விசா மற்றும் கடவுச் சீட்டு அடிப்படையிலும் மின் இணைப்பு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.