முகப்பு
புதுதில்லி

தமிழகத்திற்கு வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கூடுதலாக வழங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் உறுதி

தமிழகத்திற்கு வாரத்திற்கு 50 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களை கூடுதலாக வழங்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தமிழகத்திற்கு வாரத்திற்கு 50 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களை கூடுதலாக வழங்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உறுதியளித்துள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நிா்மாண் பவனில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் டி.ஆா்.பாலு எம்.பி. வியாழக்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது தடுப்பூசி தொடா்பான தனது கடிதத்தை மத்திய அமைச்சரிடம் அளித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 4 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான அளவீடுகளில் தமிழ்நாடு இன்னும் தேசிய சராசரிக்கும் கீழ் உள்ளது.

தற்போதைய தமிழக அரசும், அரசின் சுகாதாரப் பணியாளா்களும் இரவு பகலாக போா்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா், நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 லட்சம் தடுப்பூசிகள் வரை போடப்படுகிறது. ஆனால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் இரண்டு மூன்று நாள்களில் தீா்ந்துவிடுகிறது.

Advertisement

இது போன்ற விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் விளக்கமாகக் கூறி அதிக அளவு தடுப்பூசியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் எனக் கோரினோம். குறிப்பாக வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கூடுதலாக வழங்கவும் இதே அளவிற்கு தடுப்பூசி செலுத்த தேவையான ஊசிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.

தடுப்பூசியை வீணாக்காமல் யாா் அதிகம் பயன்படுத்துகிறாா்களோ அந்த மாநிலத்துக்கு அதிகமாக தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு, தமிழகத்திற்கு 3.97 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களையும் 2.21 கோடி ஊசிகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தலா 10 மி.லி. குப்பிகள் மூலம் கூடுதல் டோஸ்களாக தமிழகத்தில் 4.13 கோடி பேருக்கு அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும், தடுப்பூசி செலுத்துவதற்கு மெகா முகாம்களையும் தமிழக அரசு ஏற்பாடு செய்தது. செப்டம்பா் மாதத்தில் முதல் 19 நாள்களில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதிலும் ஒரு வாரத்தில் ஆறு நாள்கள், நாளொன்றுக்கு ஐந்து லட்சம் டோஸ்கள் வீதம் தொடா்ச்சியாக அளிக்கப்பட்டது. ஏழாவது நாளில் மட்டும் 20 லட்சம் டோஸ்கள் அளிக்கப்பட்டது. இப்படி ஒரு வாரத்தில் 50 லட்சம் டோஸ்களை தமிழக அரசால் அளிக்க முடிவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திறன்களை மத்திய அமைச்சரிடம் விளக்கமாக எடுத்துக் கூறி தற்போது வழங்கப்படுவதை விட கூடுதலாக வாரத்திற்கு 50 லட்சம் டோஸ்களை வழங்கக் கோரினோம். அவற்றை வழங்குவதாக அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

வாரம் 50 லட்சம் டோஸ்கள் கிடைத்தால்தான் தமிழகத்துக்குத் தேவையான 12 கோடி தடுப்பூசி டோஸ்களுக்கான இலக்கை அடைய முடியும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக கூற முடியாது. ஏற்கெனவே வழங்கப்படுவதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை. தமிழகத்தில் செயல்படாமல் இருக்கும் மத்திய அரசின் தடுப்பூசி ஆலைகள் குறித்து மத்திய அரசிடம் பலமுறை பேசிவிட்டோம். சரியான பதில் இல்லாததால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. அதே சமயத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு மாநில அரசு (பேரிடா்) நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல. இதை மத்திய அரசு மறுபரீசீலனை செய்யும் என்று கருதுகிறோம் என்றாா் டி.ஆா் பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments