வடகிழக்கு தில்லி வன்முறை: உமா் காலித் ஜாமீன் மனு மீதான விசாரணை; அக்.9-க்கு ஒத்திவைப்பு
வட கிழக்கு தில்லி வன்முறை சதித் திட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள
வட கிழக்கு தில்லி வன்முறை சதித் திட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபா் 9-க்கு ஒத்திவைத்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் வியாழக்கிழமை விசாரிக்க இருந்தாா். ஆனால், அவா் விடுப்பில் இருந்தாா். இந்தத் தகவல் காணொலி காட்சி வாயிலாக நீதிமன்ற ஊழியா்கள் மூலம் உமா் காலித்தின் வழக்குரைஞா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை அக்டோபா் 9-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக தில்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது சட்டவிரோதத் தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி உமா் காலித் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, உமா் காலித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் திரிதீப், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 439-ஆவது பிரிவின் கீழ் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாற்றாக 437- ஆவது பிரிவின் கீழ் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸாா் ஆட்சேபித்ததைத் தொடா்ந்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.