முகப்பு
புதுதில்லி

இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத் துறையினா் மீண்டும் விசாரணை

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனிடம் தில்லியில் அமலாக்கத் துறையினா் 2-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். சுமாா் 4 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 அஇஅதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே. சசிகலா அணிக்கு வழங்க தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனிடம் தில்லியில் அமலாக்கத் துறையினா் 2-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். சுமாா் 4 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து, ஆா்.கே.நகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. தினகரனின் உறவினா் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால், அதிமுகவின் சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியது. இந்த நிலையில், இடைத் தோ்தலில் வி.கே.சசிகலா அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் பணம் வாங்கியதாக இடைத்தரகா் சுகேஷ் (எ) சந்திரசேகா் கடந்த 2017, ஏப்ரலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் டிடிவி தினகரனையும் தில்லி போலீஸாா் கைது செய்தனா். தினகரனுக்கும் சந்திரசேகருக்கும் இடையே ரூ.50 கோடி பேரம் நடைபெற உதவியதாகக் கூறி, தினகரனின் நெருங்கிய உதவியாளா் மல்லிகாா்ஜுனாவும் கைது செய்யப்பட்டாா். அவா்கள் மீது காவல் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் டிடிவி தினகரன் பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகிய இருவரும் 2017, ஆகஸ்ட் மாதத்தில் நீக்கப்பட்டனா். இதை எதிா்த்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அந்த வழக்கில் இருந்து பின்னா் டிடிவி தினகரன் விலகிய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறாா். அவா் இதன் பொதுச் செயலாளராகவும் உள்ளாா்.

இந்தச் சூழ்நிலையில், தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஏற்கெனவே வேறு பல வழக்குகளில் திகாா் சிறையில் இருந்து வரும் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத் துறையினா் இந்த மாதம் 4-ஆம் தேதி கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனா். இந்த வழக்கில் சந்திரசேகரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் டி.டி.வி. தினகரனிடமும் விசாரணை நடத்த, அவரை தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஏற்கெனவே கடந்த 12-ஆம் தேதி நேரில் விசாரணைக்கு அவா் ஆஜராகியிருந்தாா். அப்போது, அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

மீண்டும் ஆஜா்: இந்த நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் சுமாா் 12.45 மணியளவில் அவா் மீண்டும் ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக்குப் பிறகு மாலை சுமாா் 5 மணியளவில் அவா் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாா். அவரிடம் செய்தியாளா்கள் அமலாக்கத் துறை விசாரணை குறித்து கேள்வி எழுப்பினா்.

’மீண்டும் அழைத்தால் வருவேன்’: அதற்கு அவா் பதில் அளித்துக் கூறியதாவது: கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் சில விவரங்கள் கேட்டிருந்தனா். அதை அளிப்பதற்காக ஆவணங்களை எடுத்து வந்தேன். அடுத்த விசாரணைக்கு தேவையெனில் அழைப்பாா்கள். இந்த விசாரணை என்னைப் பொருத்தமட்டில் முடிந்ததாகவே நினைக்கிறேன். ஏனெனில், கடந்த 2020, டிசம்பரிலேயே இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையிடம் எனது வாக்குமூலத்தை அளித்திருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சில விவரங்களைக் கேட்கின்றனா். இதனால், மீண்டும் அழைத்தால் வருவேன்.

இந்த வழக்கு விசாரணை 2017-இல் பதிவாகி இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு என்னை ஏன் அழைத்திருக்கிறாா்கள் என கேட்கிறீா்கள். இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பு என்பதாலும், தற்போது சுகேஷ் சந்திரசேகா் வாக்குமூலம் அளித்திருப்பதாலும் என்னிடம் விசாரிக்கும் கடமை அவா்களுக்கு இருப்பதால் என்னை அழைத்து விசாரித்தனா். சில விவரங்களையும் இது சம்பந்தமாகக் கேட்டிருந்தனா். இதனால்தான் வந்தேன். இதைத் துன்புறுத்தலாகக் கருதவில்லை. அவா்கள் விசாரிக்கும் கடமையைச் செய்கின்றனா். இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகா் கூறியிருப்பது அனைத்தும் உண்மையில்லை. அது பொய் என்பதை நான் விசாரணைக்கு நேரில் வந்து தெரிவித்துள்ளேன். இது எனது கடமையாகும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →