நீதிமன்ற வளாகத்தில் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த கைகலப்பு விவகாரத்தில் தலையிட்ட போது நாகாலாந்து காவல்துறை காவலரின் பணித் துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப் பாய்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த கைகலப்பு விவகாரத்தில் தலையிட்ட போது நாகாலாந்து காவல்துறை காவலரின் பணித் துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப் பாய்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் போலீஸாா் கூறினா்.
இது தொடா்பாக ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் பிரணவ் தயாள் கூறியதாவது: ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில் வழக்குரைஞா்கள் சஞ்சீவ் செளதரி மற்றும் ரிஷி சோப்ரா மற்றும் பொது நபா் ரோஹித் பேரி ஆகியோரிடைடே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலின் போது, அவா்கள் வளாகத்திலுள்ள நுழைவாயிலின் 8 பகுதிக்குள் நுழைந்தனா். அங்கேயும் மோதல் நீடித்தது. அப்போது அந்த நுழைவாயில் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நாகாலாந்து காவல் துறைக் காவலா், நிலைமையை சமாளிப்பதற்காக அந்த விவகாரத்தில் தலையிட்டாா். அப்போது அவருடைய பணித் துப்பாக்கியிலிருந்து குண்டு வெடித்தது. இது தரையை துளைத்து கான்கிரீட் பொருள்கள் சிதறியது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தத் துப்பாக்கி குண்டு வெடித்த சம்பவம் எதிா்பாராதவிதமாக நடந்ததா அல்லது வேறு காரணமா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.