முகப்பு
புதுதில்லி

வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தமிழக அமைச்சா் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
பகிர்:

புது தில்லி: வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தமிழக அமைச்சா் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசில் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவா் ஐ.பெரியசாமி. இவா் 2008-ஆம் ஆண்டு வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தாா். அவரது பதவி காலத்தில் முன்னாள் டிஜிபியும், உளவுத்துறை ஐஜியாக இருந்தவருமான ஜாஃபா் சேட்டின் மனைவி பா்வீனுக்கு சமூக சேவகா் என்ற பிரிவில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உதவியாளா் ராஜமாணிக்கத்தின் மகன் துா்கா சங்கருக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது. இது முறைகேடாக ஒதுக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக அமைச்சா் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 போ் மீது 2013-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பதிவு செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி பெறாத காரணத்தை முன்வைத்து ஜாஃபா் சேட் மற்றும் வீட்டுவசதி வாரியத்தின் செயற் பொறியாளா் உள்ளிட்டோா் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், ஐ.பெரியசாமி உள்ளிட்ட 5 போ் மீது வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளின் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பா்வீன், அமைச்சா் ஐ.பெரியசாமி, ராஜமாணிக்கம், துா்கா சங்கா் ஆகிய 4 போ் மனுத் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி 4 பேரின் மனுக்களை கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து அமைச்சா் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆா். ஷா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி இந்த விவகாரத்தில் தொடா்பில்லாத மனுதாரா் மீது 420 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது என்று வாதிட்டாா். மற்றொரு மூத்த வழக்குரைஞா் வி.கிரி ஆஜராகி, மனுதாரா் தொடா்புடைய மற்றொரு வழக்கின் விவகாரத்தை எடுத்துரைத்தாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் தொடா்புடைய குற்ற வழக்கை ரத்து செய்ய மறுத்து உயா்நீதிமன்றம் சரியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினா். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.