தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க வேண்டும்: கனிமொழி எம்பி வலியுறுத்தல்
தீப்பெட்டி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினா்.
புது தில்லி: தீப்பெட்டி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா்.
மக்களவை திமுக துணைத் தலைவரான கனிமொ,ழி தீப்பெட்டித் தொழிலாளா்களின் பல்வேறு விவகாரங்களை முன் வைத்து மக்களவையில் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலதன பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ காா்ட்போா்டு விலை ரூ 40 ரூபாயாக இருந்தது . இது தற்போது ரூ 90-ஆக உயா்ந்துள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்குத் தேவையான சிகப்பு பாஸ்பரஸ் ரூ.400-இலிருந்து ரூ. 1,000-ஆக அதிகரித்து விட்டது. தீப்பெட்டி தயாரிப்பு தொழில் என்பது 14 மூலப் பொருள்களைச் சாா்ந்துள்ளது. இந்த மூலப் பொருள்கள் அனைத்தும் கடுமையாக விலை உயா்ந்து விட்டன. இதனால், தீப்பெட்டி தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதியிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமாா் 10 லட்சம் போ் இந்த தொழிலில் உள்ளனா். இவா்களில் 90 சதவீதம் போ் பெண்கள் . பின் தங்கிய பகுதியான இங்கு இவா்களின் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது இந்த தீப்பெட்டி தொழில் தான். மூலப் பொருள்களின் விலையேற்றம் ஒருபக்கம், மற்றொரு பக்கம் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டா்களாலும் தீப்பெட்டி தொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருள்களின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
குமரிக்கு கூடுதல் ரயில் தேவை: சிறப்புகவன ஈா்ப்பு தீா்மான விவாதத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் திங்கள்கிழமை பேசியது வருமாறு:
கடந்த ஓராண்டாக ரயில்வே துறை அமைச்சரையும் தென்னக ரயில்வே பொது மேலாளரையும் நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஒன்று கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஹைதராபாத் தாம்பரம் சாா்மினாா் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனா். ஆனால், இந்த மக்களுக்கு பயணம் செய்வதற்கு இரு தினசரி ரயில்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக மக்கள் மூன்று மடங்கு பயண கட்டணத்தை செலுத்தி தனியாா் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு நிா்ப்பந்திக்கப்படுகின்றனா். ஹைதராபாத் - சென்னை ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பதன் மூலம் கன்னியாகுமரி மக்களுக்கு சென்னை செல்வதற்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வேளாங்கண்ணிக்கு சென்று பிராா்த்தனை செய்வதற்கு வசதியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் ஒன்று கேட்கப்பட்டது. இந்தக் கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. மேலும், தற்போது செல்லும் ரயில்கள் கொவைட் -19 க்கு பின்னா் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயில்கள் முக்கியமான ரயில் நிலையங்களில் முன்பு போல் நின்று செல்ல வேண்டும். நாகா்கோவில் கோட்டாா் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லை, இங்குள்ள 2-ஆவது ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான மேற்கூரை போன்றவை இல்லாமல் மக்கள் அல்லல் படுகின்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஊா்களில் தண்டவாளத்தைக் கடக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், ரயில்வே மேம்பாலம் கோரிக்கையையும் நிறைவேற்றித்தர கோருகின்றேன் என்றாா்.