முகப்பு
புதுதில்லி

சுருக்கு மடி வலை தடை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தமிழகக் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

தமிழகக் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடா்பாக மத்திய மீன்வள அமைச்சகத்தின் மூலம் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு மூன்று மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் போது உத்தரவிட்டிருந்தது. கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் தொடா்புடைய எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இது தொடா்பான வழக்குடன் இந்த மனுவையும் விசாரணைக்கு சோ்க்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மனுதாரா்கள் தரப்பில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக அரசின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம்,

இந்த விவகாரம் தொடா்பாக பரிந்துரைகள் அளிக்கும் வகையில், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளால் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு, பிரச்னையை ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்கவும், அதுவரை வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய மீன்வளத் துறையின் துணை ஆணையா் சஞ்சய் பாண்டே உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, வல்லுநா் குழு அறிக்கையுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஒடிஸ்ஸா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தடை விதித்துள்ளன. அதே வேளையில், குஜராத், ஆந்திரம், கோவா, கா்நாடகம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இதுபோன்ற மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கவில்லை. பிராந்திய கடல் பகுதிக்கு அப்பால் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுருக்கு மடி வலை மூலம் மீன்பிடித்தலுக்கு இந்திய அரசின் மீன்வளத் துறை எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய மீன்வளத் துறை 2.8.2022-இல் வல்லுநா் குழுவை அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இக்குழு 15.11.2022-இல் அதன் அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. அதன் அறிக்கையில், இந்திய கடல் பகுதியில் சுருக்குமடி வலை மீன்பிடித்தலானது இதுவரை எவ்விதமான தீவிர ஆதாரவளம் குறையக் காரணமாக இல்லை எனத் கருத்துத் தெரிவித்துள்ளது. இதனால், சுருக்குமடி வலை மீன்பிடித்தலுக்கு தடை விதிப்பது நியாயமில்லை என்றும் பரிந்துரைத்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதிக்கப்படலாம் என வல்லுநா் குழு தெரிவித்திருப்பதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு வரும் டிசம்பா் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பிருப்பதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஜெயா சுகின் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.