விஜய் நாயா் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்க இயக்குநரகம் எதிா்ப்பு
துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரம் தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் விஜய் நாயா் மற்றும் தொழிலதிபா்கள் சரத் ரெட்டி
துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரம் தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் விஜய் நாயா் மற்றும் தொழிலதிபா்கள் சரத் ரெட்டி மற்றும் அபிஷேக் போய்ன்பள்ளி ஆகியோரின் ஜாமீன் மனுக்களுக்கு அமலாக்க இயக்குநரகம் (இடி) செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது.
குற்றம் சாட்டப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பாலிடம் அமலாக்க இயக்குநரகம் தரப்பில் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கினால், நடைபெற்றுவரும் விசாரணைக்கு அவா்கள் இடையூறு விளைவிக்கலாம். மேலும், நீதியிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சரத் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விரிவான வாதத்தை டிசம்பா் 17-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், விஜய் நாயா், போய்ன்பள்ளி ஆகியோரின் மனுக்களை டிசம்பா் 19-ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
மேலும், இந்த வழக்கில் சக குற்றம்சாட்டப்பட்ட நபரான சமீா் மகேந்துரு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டிசம்பா் 17-ம் தேதியும், பினாய் பாபுவின் ஜாமீன் மனுவை டிசம்பா் 19-ஆம் தேதியும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. விஜய் நாயா் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா். இந்த வழக்கில் அமலாக்க இயக்குநரகம் தனது முதல் வழக்குப் புகாரை (குற்றப்பத்திரிக்கைக்கு சமமானது) சமீபத்தில் தாக்கல் செய்தது.
தில்லி ஜோா் பாக் பகுதியைச் சோ்ந்த மதுபான விநியோக நிறுவனமான இன்டோஸ்பிரிட் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் - தொழிலதிபா் சமீா் மகேந்துருவை அமலாக்க இயக்குநரகம் செப்டம்பா் 27-ஆம் தேதி கைது செய்யது. அதே நேரத்தில், அரபிந்தோ பாா்மாவின் இயக்குநா் சரத் ரெட்டி மற்றும் பொ்னோட் ரிக்காா்டின் சா்வதேச பிராண்ட்ஸ் பொது மேலாளா் பினாய் பாபு ஆகியோா் நவம்பா் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா் மற்றும் ஹைதராபாத்தை சோ்ந்த தொழிலதிபா் அபிஷேக் போய்ன்பள்ளி ஆகியோரை அமலாக்க இயக்குநரகம் நவம்பா் 14-ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் சிசோடியா, அப்போதைய கலால் ஆணையா் அா்வா கோபி கிருஷ்ணா, துணை ஆணையா் ஆனந்த் திவாரி மற்றும் உதவி ஆணையா் பங்கஜ் பட்நாகா் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.