முகப்பு
புதுதில்லி

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் நோ்முக-மறைமுகவரி வருவாய் வசூல் ரூ.5.48 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,73, 930 கோடியை மத்திய அரசு நேரடி வரியாகவும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரியாகவும் வருவாயை பெற்றுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,73, 930 கோடியை மத்திய அரசு நேரடி வரியாகவும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரியாகவும் வருவாயை பெற்றுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. இந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ. 5,48,412 கோடி வசூலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று நிதியாண்டுகளில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் மற்றும் மத்திய அரசு, தமிழக அரசுக்கு மூலதன செலவினம், வருவாய் செலவீனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கிய விவரங்களை மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா். மேலும் வரி வருவாய்க்கும் மத்திய அரசு ஒதுக்கும் மூலதனம் மற்றும் வருவாய் செலவினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி அளித்துள்ள பதில் வருமாறு: கடந்த 2019-20, 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளில் முறையே நேரடி வரிகளாக ரூ. 69,809 கோடி; 61,122 கோடி ; 88,438 கோடி தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதே மூன்று ஆண்டுகளில் முறையே ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் ரூ. 74,430 கோடி ; ரூ.69,121 கோடி; ரூ. 85, 492 கோடி தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த வகையில் மூன்று ஆண்டுகளில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் மொத்தம் தமிழகத்தில் ரூ. 5,48,412 கோடி வருவாய் பெறப்பட்டது. கடந்தாண்டு(2021-22 ஆம் நிதியாண்டில்) மாா்ச் மாதம் வரை நேரடி-மறைமுக வரியாக ரூ.1,73, 930 கோடி தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.

மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் மூலதன செலவினங்கள், வருவாய் செலவினங்கள் பராமரிக்கப்படுவதில்லை. இது பல சந்தா்ப்பங்களில் சாத்தியமில்லை எனக் கூறிய மத்திய இணையமச்சா் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் விடுவிக்கப்பட்ட தொகை மற்றும் தமிழக அரசால் அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட சில செலவின விவரங்களை மட்டும் பட்டியலிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.