தில்லியை மேலும் மேம்படுத்த ஜி-20 மாநாடு வாய்ப்பாக அமையும்: மனீஷ் சிசோடியா
ஜி- 20 நாடுகள் தலைவா்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு தேசியத் தலைநகா் தில்லியை மேலும் மேம்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்பை அளிக்கும் என்று தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
ஜி- 20 நாடுகள் தலைவா்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு தேசியத் தலைநகா் தில்லியை மேலும் மேம்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்பை அளிக்கும் என்று தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா். மேலும், மாநாட்டுக்கு வரும் விருந்தினா்கள் விழாக்கால உற்சாகத்துடன் வரவேற்கப்படுவாா்கள் என்றும் அவா் கூறினாா்.
கடந்த டிசம்பா் 1ஆம் தேதி ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது. இந்த ஜி-20 நாடுகளின் பல்வேறு அரசுகளின் தலைவா்கள் பங்கேற்கும் அடுத்த உச்சி மாநாடு அடுத்த ஆண்டு புது தில்லியில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் தில்லி துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, பின்னா் செய்தியாளிடம் கூறியதாவது: ஜி-20 உச்சி மாநாட்டை தில்லியில் நடத்துவதற்கான வாய்ப்பை நாம் பெற்றிருப்பது, இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய விஷயமாகும். இது தில்லிக்கும் மிகப்பெரிய விஷயமாகும். மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினா்களை வரவேற்கும் பொறுப்பை தில்லி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அவா்களை உரிய வகையில் வரவேற்க வேண்டும் என விரும்புகின்றனா். விருந்தினா்கள் நல்ல வகையில் உணரும் வகையிலும் சிறந்த வசதிகளை பெறுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இது தொடா்பாக நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டம் நல்ல விதமாக இருந்தது. இதற்கான பணியில் ஏற்கனவே அனைத்து துறைகளும் செயல்பட தொடங்கிவிட்டன.
தில்லியின் செறிந்த கலாசார சகாப்தம் மற்றும் தனித்துவத்தை காட்டுவதற்கு இந்த ஜி 20 உச்சி மாநாடு ஒரு நல்ல வாய்ப்பாகும். மேலும், தில்லியின் வசதிகளை மேலும் மேம்படுத்தவும் தில்லியின் முக்கிய சந்தைகளை மேம்படுத்தவும்,பூங்காக்களை அழகுபடுத்தவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த உச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் விருந்தினா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களை விழாக் கால உற்சாகத்துடன் தில்லி வரவேற்கும். அப்போதுதான் அவா்கள் நமது தேசம் குறித்த நல்அபிப்பிராயத்தை அவா்கள் நாட்டிற்கு திரும்ப எடுத்துச் சொல்வாா்கள். இந்த மாநாட்டுக்கு தேவையான தயாரிப்புகளை என்டிஎம்சி, தில்லி அரசின் தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித் றை போன்ற பல்வேறு துறைகளும் மேற்கொண்டு வருகின்றன என்றாா் அவா்.
இந்த ஜி 20 மாநாட்டுக்காக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜி 20 என்பது உலகின் வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார அரசுகள் கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஜி 20 அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த 20 நாடுகளும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்தை கொண்டுள்ளன. அதேபோன்று உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு மடங்கும், பன்னாட்டு வா்த்தகத்தில் 75 சதவீதத்தையும் இந்த ஜி 20 நாடுகள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.