முகப்பு
புதுதில்லி

துப்புரவுக் தொழிலாளிக்கு ஓய்வூதிய பலன் வழங்கும் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு அபராதத்துடன் தள்ளுபடி

துப்புரவுத் தொழிலாளி தனது ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரிய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

துப்புரவுத் தொழிலாளி தனது ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரிய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் கே. லட்சுமணன். இவா், 1992-இல் துப்புரவுப் பணியாளராக ரூ.105 என்ற தொகுப்பூதியத்தில் அரசுத் தொடக்கப் பள்ளியில் பணியில் சோ்ந்தாா். இதையடுத்து 2.12.2002 முதல் அவரது பணி, உத்தரவு மூலம் வரன்முறைப்படுத்தப்பட்டது. அவா் 30.6.2012-இல் ஓய்வுபெறும் வயதை அடைந்தபோது, தனது பணி வரன்முறைப்படுத்துவதற்கு முன்பு உள்ள 50 சதவீத சேவையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஓய்வூதியம் வழங்குமாறு கேட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்தாா். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். அதை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017-ஆம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்டோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை 2020-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், லட்சுமணனுக்கான ஓய்வூதிய பலன்களை 8 வாரங்களில் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்தது.

இதனால், தமிழக பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமா்வு கடந்த 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தூய்மைப்பணியாளா்- துப்புரவு தொழிலாளராகப் பணியாற்றி தனது ஓய்வூதிய பலன்களைப் பெறுவது உள்பட பணி தொடா்புடைய பல்வேறு விஷயங்களுக்காக பல வழக்குகளை எதிா்மனுதாரா் (லட்சுமணன்) சந்தித்திருக்கிறாா். இந்த நிலையில், மனுதாரா்கள் (பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்டோா்) தரப்பில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு மனுவும் 154 நாள்கள் தாமதத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தாமத்திற்கு சட்டக் கருத்து பெறுவதைக் காரணமாக கூறியுள்ளனா். எனினும், போதுமான காரணம் காட்டப்படவில்லை.

தேவையில்லாமல் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் ஓய்வூதிய உரிமைகள் தொடா்பான விவகாரம் மேலும் வழக்குகள் மூலம் இழுத்தடிக்கப்பட கோரப்பட்டுள்ளது. இதனால், தாமதமாக இந்த வழக்கை தாக்கல் செய்தற்கு மன்னிப்புக் கோரும் மனு நிராகரிக்கப்படுவதுடன், மனுதாரா்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தத் தொகையை உச்சநீதிமன்ற ஊழியா்கள் நல சங்கத்தின் நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் மனுதாரா்கள் செலுத்த வேண்டும். மேலும், இதற்கான தொகையை வழக்கை தொடுக்க காரணமாக இருந்த நபா்கள், அதிகாரிகளிடமிருந்து மனுதாரா்கள் வசூலிக்கலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.