நிலுவைத் தொகை ரூ. 19,053 கோடியைஉடனே வழங்க வேண்டும்: திமுக எம்பி
தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கடந்த ஐந்தாண்டுகளாக வரவேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ. 19,053 கோடி இருப்பதாகவும் இதை உடனடியாக வழங்க வேண்டும் என்று
தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கடந்த ஐந்தாண்டுகளாக வரவேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ. 19,053 கோடி இருப்பதாகவும் இதை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேட்டுக் கொண்டாா்.
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக மாநிலங்களவையில் சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் புதன்கிழமை அவா் பேசியதாவது: தமிழக அரசுக்கு பல்வேறு வகைகளில் செலுத்து வேண்டிய பெரும் தொகையான ரூ. 19,053 கோடி நிலுவையில் உள்ளது. அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய வளா்ச்சிப்பணிகள்ஸ நலப்பணிகள் பாதிக்கப்படுவதால் இதை அவையின் மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
2018-2019 முதல் 2021-2022 வரையிலான காலக்கட்டத்தில் பொதுவிநியோகத்தில் கஸ்டம் மில்டு ரைஸ் மானியம் (ரூ. 5,903.48 கோடி); சா்க்கரை மானியம் (ரூ.31.02 கோடி); அரிசிக்கான ஊட்டச்சத்து வலுவூட்டல் (ரூ.7.30 கோடி) மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது விநியோகத்திட்டத்தில் பிரதமரின் ஏழைகளுக்கான உணவு திட்டம் (ரூ. 251.04 கோடிகள்); தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் (ரூ. 621.16 கோடிகள்) என மொத்தம் ரூ.6814.00 தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு வழங்கப்படுவதில் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது.
மேலும், 2022-23-ஆம் ஆண்டில் 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மில்லியன் மக்கள்தொகைக்கு மேலான மற்றும் குறைவான நகரங்களுக்கான சுகாதாரம், காற்றுத் தரம் உள்ளிட்ட குறிப்பிட்டத்தக்க திட்டங்கள் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ. 1,360 கோடி விடுவிக்கப்படவில்லை. கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் 2022 ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டில் ரூ. 10,879 கோடி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ளது. இந்த தொகை வழங்கப்படாததால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கிறது. சட்டப்பூா்வமாக வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தி மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கக்கூடாது. எனவே, இந்த நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.