பெண்ணையாறு நீா்த் தாவா விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைக்க நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பெண்ணையாறு நீா்த் தாவா விவகாரத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கில், தீா்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பெண்ணையாறு நீா்த் தாவா விவகாரத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கில், தீா்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அப்போது, 3 மாதங்களுக்குள் தீா்ப்பாயம் அமைக்கு நடைமுறைகளை முடிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜனவரி மாதம் 14-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டது.
தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் கிளை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 2018-இல் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ‘பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டக் கூடாது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைதான் தொடர வேண்டும். மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசால் கட்டப்படும் தடுப்பணை, தமிழகத்தின் குடிநீா் ஆதாரத்தைப் பாதிக்கும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தாவா தீா்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதேபோன்று கா்நாடக அரசு மேற்கொள்ளும் வேறு நீா்த் திட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மனுவுக்கு கா்நாடகம் தரப்பில் தாக்கல் செய்த பதிலில், ‘தமிழக அரசு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குடிநீா்த் திட்டத்துக்கானது. இதனால், தமிழகத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த 2019, நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், தீா்ப்பாயம் அமைப்பது தொடா்பாக மத்திய அரசிடம் உரிய மனுவை அளிக்குமாறும் அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு தமிழக தரப்பில் மனு 2019-ஆம் ஆண்டு நவம்பரில் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தரப்பில், தீா்ப்பாயம் அமைப்பதில் தாமதமாகி வருவது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு மத்திய அரசின் பதில் அளிக்க 4 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.ஆா். ஷா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, மூத்த வழக்குரைஞா் காத்ரி ஆகியோா், இந்த விவகாரம் தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து கூறுகையில், ‘ ‘தீா்ப்பாயம் அமைக்கும் நடவடிக்கையை தொடங்கப்பட்டுள்ளது. தீா்ப்பாயத்திற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க ஜல் சக்தி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான குறிப்பு 29.11.22-ஆம் தேதி பிரதமா் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம், சட்டம்-நீதி அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு கருத்துக் கேட்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் இரு வாரத்தில் பதில் அளிப்பாா்கள். அதன் பிறகு, அவை கவனமாக பரிசீலிக்கப்படும். அதன் பிறகு மத்திய அமைச்சரவை முன் இதற்கான கோப்பு வைக்கப்படும். ஒப்புதலுக்குப் பிறகு, இந்தத் தீா்ப்பாய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கைகளை முடிக்க 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.
ஆனால், 6 மாதம் அவகாசம் கோரும் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. மூன்று மாதங்களுக்கு தீா்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முடிக்குமாறு கூறிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 14-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.