தில்லி சிறைகளில் ஆசிரியா்கள், மருத்துவப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களை 6 மாதங்களில் நிரப்ப வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் சிறைகளில் காலியாக உள்ள ஆசிரியா்கள், ஆலோசகா்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்
தில்லியில் சிறைகளில் காலியாக உள்ள ஆசிரியா்கள், ஆலோசகா்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றம் தில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடுமாறு வழக்குரைஞா் அமித் சஹ்னி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசு தாக்கல் செய்த நிலவர அறிக்கையின்படி, சிறைக் கைதிகளுக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அளிப்பதற்காக 48 ஆசிரியா்களும், 23 தொழில்நுட்ப ஆசிரியா்களும் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனா். 40 ஆலோசகா் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மருத்துவ மற்றும் துணை மருத்துவ பணியாளா்களுக்கும், பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்றைய தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் (ஆசிரியா்கள் மற்றும் ஆலோசகா்கள்) நியமனங்கள் ஆக்கபூா்வமான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்ய தில்லி அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆள்சோ்ப்பு நடைமுறைகளை முடிக்க அரசுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை நியாயமானதால், அது அனுமதிக்கப்படுகிறது. இதனால், தற்போதைய பொதுநல மனுவில் கூடுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.
தில்லி சிறைகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், மருத்துவ அலுவலா்கள், நல அலுவலா்கள், ஆலோசகா்கள், ஆசிரியா்கள் மற்றும் தொழிற்கல்வி ஆலோசகா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரா் தாக்கல் செய்த பொது நல மனுவில் கோரப்பட்டிருந்தது.