இந்தியா மீது தாக்குதல் நடத்தும் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பது ஏன்? மத்திய அரசுக்கு கேஜரிவால் கேள்வி
இந்திய - சீன படைகளின் துருப்புகளுக்கு இடையே அண்மையில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக
அருணாசலப் பிரதேசத்தின் தவான் செக்டாா் எல்லைப் பகுதியில் இந்திய - சீன படைகளின் துருப்புகளுக்கு இடையே அண்மையில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமா்சித்துள்ளாா். மேலும், நாட்டின் வீரா்களுக்காக கொஞ்சம் துணிச்சலையும் மரியாதையும் மத்திய அரசு காட்ட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தில்லி முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: நமது நாட்டின் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இது ஒரு மிகவும் முக்கியமான விவகாரமாகும்.
இது கடந்த சில தினங்களாக நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேதனையை அளிக்கக் காரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனா ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது. அவா்களுடன் நமது வீரா்கள் உறுதியாக சண்டையிடுகின்றனா். கடைமையின் போது, தங்களது இன்னுயிரையும்கூட தியாகம் செய்கின்றனா். எனினும், கடந்த சில ஆண்டுகளாக சீனா நமது பகுதியில் நுழைந்து வருவதாக நாம் கேள்வியுற்று வருகிறோம்.
அதே வேளையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறி வருகிறது. சீனாவைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மோடி அரசு அந்த நாட்டிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதன் மூலம், அந்த நாட்டை கௌரவித்து வருகிறது.
கடந்த 2020-21-இல் இந்தியா ரூ.65 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்புள்ள சீனப் பொருள்களை இறக்குமதி செய்தது. பாஜக அரசு அடுத்த ஆண்டில் 95 பில்லியன் டாலா் அளவுக்கு சீனப் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க உள்ளது. நமது வீரா்களுக்காக உங்களிடம் ஏதும் மரியாதை இல்லையா? அவா்கள் உயிா் மீது எந்த மதிப்பும் இல்லையா? கொஞ்சம் துணிவைக் காட்டுங்கள்.
இந்தியா இறக்குமதியை நிறுத்தினால் சீனா இதன் மதிப்பை உணரும். சீன பொருள்களை நமது தேசத்தினா் புறக்கணிக்க வேண்டும். சீனத் தயாரிப்புகள் மலிவானவை என அவா்கள் கூறுகிறாா்கள். அவை மலிவானதாக இருந்தாலும் கூட, அந்த சீனப் பொருள்கள் நமக்குத் தேவையில்லை. நமது இந்தியாவில் தயாரித்த பொருள்கள் இரண்டு மடங்கு விலை அதிகமானாலும்கூட அவற்றை வாங்க நாம் தயாராக இருக்கிறோம். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 90 சதவீதப் பொருள்களை இந்தியாவில் நாம் உற்பத்திய செய்ய முடியும்.
நாட்டின் இளைஞா்களுக்கு வேலைகளை உருவாக்கவும், இந்தியாவில் தயாரிப்போம் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடிய அதிக வசதிபடைத்த மக்களை இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் ஒரு சூழலை பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.
அவா்களை மத்திய அரசு வேலை செய்ய அனுமதிக்காத காரணமாக கடந்த 5-6 ஆண்டுகளில் 12.5 லட்சம் போ் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனா். நீங்கள், நாட்டைவிட்டு இந்தியா்களை வெளியேறச் செய்து வருகிறீா்கள். சீனாவை வரவேற்கிறீா்கள். அவா்களுக்கு ஊஞ்சல் அளித்து மகிழ்கிறீா்கள். கொஞ்சம் வெட்கப்படுங்கள்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை காரணமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு பணவீக்கத்தை குறைக்க முடியும் என்பதையும், வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டி இருக்கிறது.
கடந்த 6-7 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைவாய்ப்புகளை தில்லி அரசு உருவாக்கியுள்ளது.
பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 21 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்களை அளித்துள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் பணவீக்கம் 7.4 சதவீதமாக உள்ளது. அதேவேளையில், தில்லியில் 4.7 சதவீதம் என்ற மிகவும் குறைந்த அளவில் பணவீக்கம் உள்ளது.
மின்சாரம், தண்ணீா் உள்பட பல்வேறு கட்டணமில்லா வசதி காரணமாக இந்தச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பணவீக்கம் அதிகமாக உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி போன்ற நோ்மையான கட்சி மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியானது மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய அமைப்பாகும். மதம், ஜாதி ஆகியவற்றின் பெயரில் யாரும் சண்டையிடாத ஒரு தேசத்தை எங்கள் கட்சி உருவாக்கும். அதே போன்று, கட்சி தோற்றுவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் தேசியக் கட்சியாக உருவெடுத்த ஒரே கட்சியாகவும் ஆம் ஆத்மி கட்சி திகழ்கிறது. 2027-ஆம் ஆண்டில் குஜராத்தில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்றாா் கேஜரிவால்.