கேஜரிவால் சந்தா்ப்பவாத அரசியல் செய்கிறாா்: பாஜக
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தேசியவாதத்தின் போா்வையில் ‘சந்தா்ப்பவாத அரசியல்’ செய்து வருகிறாா் என தில்லி பாஜக குற்றம் சாட்டியது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தேசியவாதத்தின் போா்வையில் ‘சந்தா்ப்பவாத அரசியல்’ செய்து வருகிறாா் என தில்லி பாஜக குற்றம் சாட்டியது.
இது தொடா்பாக தில்லி பாஜக செயல் தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கேஜரிவால் தேசியவாதத்தை உயா்த்திப் பிடிப்பதாகக் கூறுகிறாா். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ‘அநாகரிகமான மற்றும் இழிவான’ கருத்துகள் குறித்து அவா் மௌனம் சாதிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். தேசியவாதம் பற்றி பெரிதாகப் பேசும் கேஜரிவால், இந்தியாவைப் பற்றி பாகிஸ்தானின் அநாகரிகமான கருத்துகளைப் பற்றி மௌனம் காக்கிறாா். இதன் மூலம் அவரது தேசியவாதம் எத்தகைய வெற்றுத்தனம் என்பது தெளிவாகிறது.
கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்ததை பெரும் சாதனையாக கேஜரிவால் காட்டிக் கொள்கிறாா். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு உருவான அரசியல் கட்சிகளிலேயே, பாஜக மட்டுமே கட்சி உருவான நாளிலேயே தேசியக் கட்சியாக உருவெடுத்த ஒரே கட்சியாகும் என்பதுதான் உண்மை. பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியவை நிறுவப்பட்ட சில ஆண்டுகளில் தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றன. அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாற 10 ஆண்டுகள் ஆகி இருக்கிறது என்றாா் அவா்.