முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பன்முகம்!

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.

Updated On : 28 மார்ச், 2026 at 10:43 PM
பகிர்:

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் சா. விஸ்வநாதன். அவர் தனது ஓய்வுக் காலத்தை தொடர் இலக்கிய நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, எளியோருக்கு உதவிகள், அடையாளம் காணப்படாத சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் எனப் பயனுடையதாக மாற்றி வருகிறார்.

புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர், மரம் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், செஞ்சிலுவைச் சங்க இணைச் செயலர், அரசு மாவட்டப் பசுமைக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார். இவர் யாரேனும் உதவியோ, யோசனையோ கேட்டால் தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்து வரும் இளைஞராக மிளிர்கிறார்.

எழுபத்தொரு வயதாகும் விஸ்வநாதன், தினமும் இரவு சுமார் 7 மணியளவில் சமூக ஊடகங்களில் தான் வாசித்த ஏதாவதொரு நூலை அறிமுகம் செய்து, அட்டைப்படத்துடன் பகிர்கிறார். அவருடன் பேசியபோது:

'2016-ஆம் ஆண்டில் 'துக்ளக்' ஆசிரியர் சோ. ராமசாமி இறந்தபோது, அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தால் நான் தொடங்கியதுதான் புதுக்கோட்டை வாசகர் பேரவை. அடுத்த ஆண்டே எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி.

தொடர்ந்து, ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்குப் பாராட்டு விழா, எழுத்தாளர் அகிலன், தியாகி சத்தியமூர்த்தி, வள்ளலார், முத்துலட்சுமி ரெட்டி, ம.பொ.சி. ஆகியோர் பிறந்த நாள், ராமானுஜர் 1000, மார்க்ஸ் 200, நிவேதிதா 150, விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 125, ரஷியப் புரட்சி 100, இந்திரா நூற்றாண்டு, கக்கன் நினைவுச் சொற்பொழிவு, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு, எழுத்தாளர் சூடாமணி சிறுகதைகள் கருத்தரங்கு, அழ. வள்ளியப்பா நூற்றாண்டு எனக் காத்திரமான நிகழ்வுகளை நடத்தினேன். நடத்தியும் வருகிறேன்.

தொடக்கத்தில் வாசகர் பேரவையின் முதல் நான்கு நிகழ்ச்சிகளை தனி அரங்கில் நடத்திப் பார்த்தோம். பின்னர் மாணவர்களிடம் கொண்டு செல்வதுதான் அவசியமானதாக இருக்கும் எனத் தீர்மானித்து கல்வி நிலையங்களில் நடத்தத் தொடங்கியிருக்கிறோம்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் மாலன் போன்றோரையும் அழைத்திருக்கிறோம். நான் யாரையும் வாழ்த்தவேண்டும் என்றால், மகாத்மா காந்தியின் சுயசரிதையை அளித்து அவர்களை வாழ்த்துவேன். இதற்காக அந்நூல்களை மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்திருக்கிறேன்.

மாணவர்களிடம் போட்டிகள் வைத்து, புத்தகங்களை மட்டுமே பரிசுகளாக அளிக்கிறோம்.

புதுக்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகளை முழுமையாக ஒருங்கிணைப்பதும், பரிசளிப்பதும் வாசகர் பேரவையின் முழுப் பொறுப்பு.

அகிலன் பிறந்த பெருங்களூரில் உள்ள அரசுப் பள்ளி, மேலப்பட்டி அரசுப் பள்ளிகளின் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். 'தினமணி'யின் மாணவர் மலர், மருத்துவ மலர், தீபாவளி மலர் போன்றவற்றைத் தாராளமாக வாங்கி, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறோம். தன்னார்வப் பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கான நூல்களை வாங்கித் தந்திருக்கிறோம். இந்தப் பணிகளுக்கு வாசகர் பேரவையினர், மரம் நண்பர்கள் அமைப்பினருடன் இணைந்து செயல்படும் கொடையாளர்களும்தான் உதவியாக இருக்கின்றனர்.

கஜா புயலின்போதும், கரோனா காலத்திலும் கிராமங்களுக்குச் சென்று உதவியிருக்கிறோம். அரசியல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளுக்கு இடம் தராத வகையில், முக்கிய பொது சுவர்களில் தேசியக் கொடிகளை நீளமாக வரைந்து பாதுகாக்கிறோம்.

ஆண்டுதோறும் மகளிர் தின விழாவை பெண் அஞ்சலர்கள், பெண் தூய்மைப் பணியாளர்களுடன் கொண்டாடி வருகிறோம். உலகத் தாய்மொழிகள் தினம், இந்தியப் பத்திரிகைகள் தினம், தேசிய இளைஞர் தினம், தேசிய அறிவியல் தினம் என எதையும் விடுவதில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களைச் சென்றடைவதற்காக, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, ஸ்ரீ பாரதி கலை, அறிவியல் கல்லூரி, அரசுக் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் நடத்திவருகிறோம்'' என்கிறார் சா. விஸ்வநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.