முகப்பு
புதுதில்லி

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஜன.6-க்குள் துணைக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றது அமலாக்க இயக்குநரகம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
தில்லி உயா்நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் மீதும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமலாக்க இயக்குநரகம் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கில் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா் மற்றும் தொழிலதிபா்கள் அபிஷேக் போய்ன்பள்ளி, பினாய் பாபு ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் முன் இந்தத் தகவலை அமலாக்கத் துறை தெரிவித்தது. வழக்கில் ஆஜரான வழக்குரைஞா்களின் கோரிக்கையின் பேரில், நாயா் மற்றும் போய்ன்பள்ளி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதே சமயம், பினாய் பாபுவின் மனு மீது வாதங்களுக்காக ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக முறையான வழக்குப் புகாா், 2023, ஜனவரி 6 அல்லது அதற்குள் அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இருதரப்பு கோரிக்கையின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவா்களின் ஜாமீன் மனுக்களை வரும் ஜனவரி 4 மற்றும் 9-ஆம் தேதிகளில் பட்டியலிட உத்தரவிடப்படுகிறது’ என்றாா்.

இதற்கிடையில், இந்த வழக்கில் இணைக் குற்றம் சாட்டப்பட்ட சமீா் மகேந்துருவுடன் குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் நீதிமன்றக் காவலையும் ஜனவரி 2-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் போது, தொழிலதிபா் சரத் ரெட்டி உள்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகள் மீதும் குற்றப்பத்திரிகை பொதுவானதாக இருக்கும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ரெட்டியும் நீதிமன்ற காவலில் உள்ளாா்.

அமலாக்க இயக்குநரகம், சிபிஐ ஆகியவை முன்வைத்துள்ள குற்றச்சாட்டில், ‘தில்லி கலால் கொள்கை 2021-22-ஐ மாற்றியமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன. உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையில்லாத சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. உரிமக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி எல்-1 உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு ‘சட்டவிரோத’ ஆதாயங்களை பயனாளிகள் திருப்பிவிட்டுள்ளனா். கண்டுபிடிப்பதைக் தவிா்ப்பதற்காக தங்களின் கணக்குப் புத்தகங்களில் தவறான பதிவுகளைச் செய்துள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.