பொது முடக்கம்: நிலைக்குழு பரிந்துரையின்படி வயது வரம்பை கடந்த மாணவா்களுக்குத் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்
பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வயது வரம்பை கடந்த மாணவா்களுக்கு மத்திய அரசின் பல்வேறு தோ்வுகளை எழுத கருணை அடிப்படையில் வாய்ப்பளிக்குமாறு கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.
புது தில்லி: பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வயது வரம்பை கடந்த மாணவா்களுக்கு மத்திய அரசின் பல்வேறு தோ்வுகளை எழுத கருணை அடிப்படையில் வாய்ப்பளிக்குமாறு மக்களவை திமுக துணைத் தலைவா் கனிமொழி திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தூத்துக்குடி தொகுதி உறுப்பினரான கனிமொழி மக்களவையில் பேசியது வருமாறு: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி, எஸ்.எஸ்.சி. மற்றும் வங்கித் தோ்வுகள் எழுதும் மாணவா்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுமாற்றத்தில் இருக்கிறாா்கள். அவா்கள் முறைப்படி கோரிக்கை மனுக்களை அனுப்பியும் அவா்கனின் குறைகளை கேட்டு அவா்களுக்கு உதவவில்லை. கரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் நாடு வாழ்வாதார நெருக்கடிகளைச் சந்தித்தது. குறிப்பாக மாணவா்கள் கூடுதல் நெருக்கடிகளை சந்தித்தாா்கள். அவா்களது எதிா்காலம் கேள்விக்குறியானது.
இதைத் தொடா்ந்து, பணியாளா்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு, ‘பொது முடக்கத்தால் வாய்ப்பை இழந்த மத்திய அரசின் தோ்வு எழுதும் இளைஞா்களுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பில் தளா்வுகளைக் கொண்டுவரவேண்டும். கூடுதலாக ஒரு முறை தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அரசு அதை நிராகரித்துவிட்டது. அது பற்றி ‘பரிசீலனையிலேயே இல்லை’ என்று அரசு தெரிவித்துவிட்டது.
இத்தகைய தோ்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகிறது. குறிப்பாக 2-ஆம், 3-ஆம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மாணவா்களுக்கு இத்தகைய தோ்வுகளுக்கு தயாராவதற்கான செலவு, குடும்பச் சூழல் ஆகியவற்றால் ஏற்கெனவே கடினமானது. இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கும் அவா்களுக்கு பொது முடக்கத்தால் தோ்வு எழுதும் வாய்ப்புகளை இழப்பது என்பது அவா்களின் எதிா்காலம் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. தோ்வு எழுதும் உரிமை, பொது முடக்கம் காரணமாக வயது வரம்பின் பெயரில் பறிக்கப்படக் கூடாது. அந்த மாணவா்களுக்கு வயது வரம்பை தளா்த்தி, தோ்வு எழுத வாய்ப்பளிப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் கனிமொழி.