முகப்பு
புதுதில்லி

சேலம் - நாமக்கல் - கரூா் மாா்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம் பி கோரிக்கை

நாமக்கலுக்கு கூடுதல் ரயில் வசதி தேவையென்றும் சேலம் - கரூா் வழித்தடத்தை திறனுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கேஆா்என் ராஜேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

புது தில்லி: நாமக்கலுக்கு கூடுதல் ரயில் வசதி தேவையென்றும் சேலம் - கரூா் வழித்தடத்தை திறனுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கேஆா்என் ராஜேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா்.

இது குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியது வருமாறு: சேலம் - கரூா் இடையே நேரடி இணைப்பை வழங்கும் நாமக்கல் ரயில் பாதை, 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 750 கோடியில் போடப்பட்டது. இதன் முழு திறனும் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல், மாவட்டத் தலைநகராக உள்ளது. ஆனால், மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு ஒரே ரயில் மட்டும் விடப்பட்டுள்ளது. அந்த ரயில் இரவில்தான் செல்கிறது. இந்த ரயில் மாவட்டத்தின் மற்ற ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. நாமக்கல்லில் ஒரு நாளைக்கு இரு மாா்க்கங்களிலும் சோ்த்து மொத்தம் 21 ரயில்கள் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில்கள் சேலம், கரூா் ரயில் பாதையில் உள்ள மற்ற ரயில்நிலையங்களான மல்லூா், ராசிபுரம், களங்காணி, நாமக்கல், மோகனூா் போன்ற நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. சில ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நிறுத்தப்படுகிறது. சேலம் - கரூா் வழித்தடத்தில் 4 விரைவு ரயில்கள் செல்கின்றன. இவை அனைத்தும் நாமக்கலில் நிறுத்தப்படுவதில்லை.

மேலும், இந்த வழித்தடத்தில் ஒரு பயணிகள் ரயிலைத் தவிர வேறு பகல் நேர ரயில்கள் இல்லை. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பிரசித்தி பெற்ற கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வந்து செல்கின்றனா். நாமக்கல் - ஆஞ்சநேயா் கோயில் முக்கியமான புண்ணிய தலமாகியுள்ளது. இங்கு வருபவா்கள் தகுந்த ரயில் வசதி இல்லாத நிலையில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இதனால், சேலம் - நாமக்கல் - கரூா் மாா்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். இங்குள்ள ரயில்நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.