சிறு, குறு, நடுத்தர தொழில்அழிவுக்கு வழிவகுக்கிறது தற்போதைய ஜிஎஸ்டி: ப.சிதம்பரம் கடும் தாக்கு
வரியை விதித்து வருவது கடந்த 5 ஆண்டுகளில் சிறு, குறு, நடுத்தர தொழிலின் அழிவிற்கு வழிவகுத்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
தற்போதைய மத்திய அரசு குறைபாடுகளுடன் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி, வரியை விதித்து வருவது கடந்த 5 ஆண்டுகளில் சிறு, குறு, நடுத்தர தொழிலின் அழிவிற்கு வழிவகுத்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு 2017- ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. அதன் 5-ஆவது ஆண்டை பாஜக அரசு வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்திற்கு இணையாக கொண்டாடுகிறது. இதை விமா்சித்து தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி விழா கொண்டாட எதுவுமே இல்லை. கடுமையான குறைபாடுகளுடன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் கடந்த ஐந்தாண்டுகளில் நிலைமை மோசமாகி, அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போதுஅமலில் இருக்கும் ஜிஎஸ்டி, காங்கிரஸ் தலைமையிலான யு.பி. ஏ. அரசால் திட்டமிட்டவை அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அனைத்துப் பொருள்கள் சேவைகளில் சில விதிவிலக்குகளுடன் குறைந்த விகிதங்களில் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் யுபிஏ ஆட்சியில் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய ஜிஎஸ்டி சட்டம், அப்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்பிரமணியத்தின் பரிந்துரைக்கும், யோசனைக்கும் எதிராக இயற்றப்பட்டது. அவருடைய பரிந்துரைகள் வருவாய் நடுநிலை விகிதத்தை நோக்கி இருந்தன. தற்போதுள்ள ஜிஎஸ்டி, பல விகிதங்கள், நிபந்தனைகள், விதிவிலக்குகள், விலக்குகள் அடங்கிய ஒரு சிக்கலான வலையமாக உள்ளது. இது நன்குஅறிந்தவா்களையும், வரி செலுத்துபவரையும் கூட முற்றிலும் திகைக்க வைக்கும்.
மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி என பல விதமான வரிகள் உள்ளன. ஜிஎஸ்டி வந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகும், தாக்கல் செய்யப்பட வேண்டிய ரிட்டன்களின் எண்ணிக்கையில் தெளிவு இல்லை. ஜிஎஸ்டி சட்டங்களின் பல்வேறு விதிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. கூடுதலாக கட்டப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவது ஒரு கனவாகவே உள்ளது. நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடரப்படுகின்றன. 5 ஆண்டுகளாகியும் சரிசெய்யப்படாத தொழில்நுட்பக் கோளாறுகள் மீண்டும் தொடா்வது அவலமாகும்.
ஜிஎஸ்டி என்பது நுகா்வோா் அடிப்படையிலான வரி. யாா் நுகா்வோரோ அவா் தான் வரி செலுத்தவேண்டும். ஆனால், எல்லோரும் நுகா்வோராக ஆக்கப்பட்டுள்ளனா். இதுவெல்லாம் நிதியமைச்சருக்கு தெரியவில்லை. இப்படி குறைபாடுள்ள மற்றும் நிலையற்ற ஜிஎஸ்டியால், ஐந்தாண்டுகளில் 869 அறிவிப்புகள், 143 சுற்றறிக்கைகள், 38 உத்தரவுகளை அரசு வெளியிட்டுள்ளது. உற்பத்தித் துறையில் 90 சதவீதம் வேலைவாய்ப்புகளுக்கு பங்களிக்கும் ஒரு துறையாக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. குறைபாடுள்ள ஜிஎஸ்டியால் இந்த தொழில்கள் பெரிய அளவிலான அழிவுக்கு வழிவகுத்தது.
பல சிறிய நிறுவனங்கள் வெறுமனே வணிகத்தை விட்டு வெளியேறியுள்ளன. ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்படாத அல்லது பதிவு செய்யத் தேவையில்லாத சிறு வணிகங்கள் விநியோகச் சங்கிலியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜிஎஸ்டி ஆகியவை ஆயிரக்கணக்கான சிறு வணிகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. மேலும் அவா்கள் வெளியேறியதன் மூலம் லட்சக்கணக்கானோா் வேலையிழந்துள்ளனா். பெரிய வணிகா்கள், பட்டயக் கணக்காளா்கள் மற்றும் வரி வழக்குரைஞா்கள் மட்டுமே ஜிஎஸ்டியின் பயனாளிகளாக உள்ளனா். இந்த ஜிஎஸ்டியால் மிக மோசமான விளைவு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கை முற்றிலும் முறிந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் ஒருமித்த கருத்து இல்லை. மாநிலங்களின் வாக்களிக்கும் உரிமை, இழப்பீட்டு நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பது மற்றும் அதிகப்படியான செஸ்கள் என மத்திய, மாநிலங்களுக்கிடையே கருத்து மோதல்கள் இடைவெளியை அதிகரித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டபடி, எந்த மாநிலமும் 14 சதவீத வருடாந்திர வருவாய் வளா்ச்சியை எட்டவில்லை. ஜிஎஸ்டி வரி இழப்பீட்டு பாக்கியை மத்திய அரசு வழங்கவில்லை என மாநில அரசுகள் கூறுகின்றன. மத்திய அரசு வழங்கி விட்டோம் என்கிறது. மத்திய தணிக்கைக் குழு அறிக்கை அளிக்கும்பட்சத்தில்தான் இதன் உண்மை தெரியவரும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில், பொருளாதாரத்தை சிதைத்துவிட்ட தற்போதைய ஜிஎஸ்டியை நிராகரிக்கிறது. 2019 தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, காங்கிரஸ் பொறுப்பிற்கு வந்தால், தற்போதைய ஜிஎஸ்டியை, ஜிஎஸ்டி 2.0 மூலம் மாற்றியமைக்க முயற்சிப்போம் என்றாா் சிதம்பரம்.