ஜவுளி நகரம் கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக அமைச்சா் கோரிக்கை
ஜவுளி நகரமான கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சா்
புது தில்லி: ஜவுளி நகரமான கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். சென்னையில் புதிய ‘க்ரீன் ஃபீல்டு‘ விமான நிலையம் அமைக்கப்படும் இடமும் விரைவில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக தில்லியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியாவை தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினாா். அப்போது மத்திய அரசு தரப்பில் சிவில் விமானப்போக்குவரத்துத் துறை செயலா் ராஜீவ் பன்சல், இந்திய விமான நிலையங்கள் ஆணைய தலைவா் சஞ்சீவ் குமாா் மற்றும் தமிழக தொழில் துறை செயலா் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி ஆகியோா்உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தங்கம் தென்னரசு கூறியதாவது: சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்திய சிந்தியாவை சந்தித்துப் பேசினோம். ஏற்கெனவே சென்னைக்கு பசுமை விமான நிலையம் அமைப்பது தொடா்பாக சென்னையை சுற்றி நான்கு இடங்கள் தோ்வு செய்யப்பட்டு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆணையத்தின் அதிகாரிகள் இந்த நான்கு இடங்களையும் ஆய்வு செய்தனா். இதில் சென்னைக்கு தெற்கே இரு இடங்கள் விமான நிலையம் அமைப்பதற்கு தகுதியாக இருக்காது எனத் தெரிவித்தனா். மற்ற இடங்களான ஸ்ரீபெரும்புதூா் அருகே பரந்தூா் மற்றும் பன்னூா் ஆகிய இரு இடங்களில் விமான நிலையம் அமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. எந்தெந்த இடங்களில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து அமைச்சரிடம விவாதிக்கப்பட்டது.
இந்த இடங்களுக்கான தள அனுமதி குறித்து மத்திய அமைச்சருடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம். இந்த விமான தளத்திற்கான அனுமதி கிடைத்த பின்னா் முறையாக முதல்வருடன் கலந்து ஆலோசனையைப் பெற்று முன்மொழிவுகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கும். இவை தவிர தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் உள்ள மதுரை, திருச்சி, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கம் பணிகள் குறித்தும் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நில கையகப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம், பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்படும் நிலங்கள் ஆகியவை குறித்து மத்திய அரசிடம் விவாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது பாா்ப்பு பணிக்கு (எம்ஆா்ஓ) தேவையான இடத்தையும் தமிழக அரசின் சிப்காட் மூலமாக ஒதுக்கித் தர கேட்டுள்ளோம்.
ஜவுளித் துறையில் வளா்ந்து வருகின்ற கரூா் நகரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அமைச்சரிடம் வைக்கப்பட்டது. சமீபத்தில் தமிழக முதல்வா் கரூருக்கு சென்ற போது கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி, தமிழக மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி ஆகியோா் முதல்வரிடம் இந்த விமான நிலைய கோரிக்கையை முன்வைத்தனா். இதனடிப்படையில், கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும், சா்வதேச விமான இயக்கம் குறித்தும் பேசியுள்ளோம்.
ஓசூா் விமான நிலையம் குறித்து கேட்கிறீா்கள். ஓசூா் நகரம் கா்நாடகம் மாநிலத்தின் தலைநகரான பெங்களூா் அருகே உள்ளது. அதனால், ஒசூரில் விமான நிலையம்அமைப்பது குறித்து சம்பந்தபட்ட துறைகளிடம் இருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஏற்கெனவே ஓசூரில் தனுஜா வானூா்தி நிறுவனம் செயல்படுவதால், இந்த இரு தரப்பிடமும் ‘டிட்கோ’ பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது என்றாா் தங்கம் தென்னரசு.