முகப்பு
புதுதில்லி

தமிழகத்தின் 7 பேர் உள்பட 49 ஆசிரியர்களுக்கு தேசிய விருது: தில்லியில் மத்திய அமைச்சர் வழங்கினார்

தமிழகத்தைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 49 ஆசிரியர்களுக்கு தேசிய தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகளை மத்திய கல்வித் துறை இணையமைச்சர்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

தமிழகத்தைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 49 ஆசிரியர்களுக்கு தேசிய தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகளை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி திங்கள்கிழமை இரவு வழங்கினார்.
 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், கற்பித்தல், கற்றல் செயல்முறைகளில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விரிவான பயன்பாடு, திட்டமிடலை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகளை மத்திய கல்வித் துறை வழங்குகிறது. கல்வி கற்பிப்பதில் திக்ஷா, இ-பாடசாலை திட்டங்களின் கீழ் மின்னணு முறையில் பாடங்களைத் தயாரித்தல், காணொலிகள் (விடியோ) போன்றவை மூலம் மாணவர்களுக்கான கற்றல் அணுகுதலுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
 இதில் விருது பெற்ற தமிழக ஆசிரியர்களின் விவரங்கள்:
 திருவாரூர் மாவட்டம், கொறடாசேரி கிளரியம் - எஸ்.கணேசன் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), உடுமலைபேட்டை-கே.பி.தயானந்த் (அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி), கரூர் வெள்ளியனை - மனோகர் சுப்பிரமணியன் (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி), சேலம் மாவட்டம், வேடபட்டி ஆர்.இளவரசன் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), இதே மாவட்டத்தின், பனைமரத்துப்பட்டியைச் சேர்ந்த பாரப்பட்டி - தங்கராஜா மகாதேவன் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), சிவகங்கை மாவட்டம், மாங்குடி- செந்தில் செல்வம் (அரசு மேல்நிலைப் பள்ளி), புதுச்சேரி, பிள்ளையார் குப்பம் - கே.ரேவதி (அரசு ஆரம்பப் பள்ளி) ஆகியோர் ஆவர்.
 மேலும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் 42 பேர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர்.
 இந்த விருதுகளை வழங்கி மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பேசியதாவது:
 தேசிய கல்விக் கொள்கை-2020, கற்பித்தல், கற்றல் நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. மொழித் தடைகளை அகற்றுகிறது. கல்வித் திட்டங்கள், மேலாண்மையுடன் கல்வி கற்பதை அதிகரித்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. இந்திய சமூகத்தில் ஆசிரியர்களுக்கு அதிக மரியாதை அளிக்கப்படுகிறது.
 கல்வித் துறையில் அயராத முயற்சிகள் மேற்கொண்டு, புத்தாக்கத்தை ஏற்படுத்தி, கரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 முழுமையான கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு வழங்கப்படுகிறது.
 இதன்மூலம் பள்ளி ஆசிரியர்கள் புதுமையான தகவல், தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும். டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்தும் திக்ஷா, இ-பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) பாடத் திட்டம், இளம் மாணவர்களின் தீவிரக் கற்றலுக்கான கல்வி இணையதளங்கள் (ஸ்வயம்), ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என்ற பி.எம்.இ.-வித்யா, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான முழு மேம்பாட்டுக்கான இணையவழி பயிற்சித் திட்டம் (நிஷிதா) ஆகியவை முன்னணித் திட்டங்களாக கல்வித் துறையில் உள்ளன.
 இதுபோன்ற நடவடிக்கைகள் சமூக, அரசியல், பொருளாதார பூகோளத் தடைகளைத் தாண்டி தரமான கல்வி பெறுவதற்கு உதவுகின்றன என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.