முகப்பு
புதுதில்லி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு பாஜக அரசின் மாயாஜாலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி பாஜக அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி பாஜக அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு பத்து ரூபாயை உயா்த்தி ரூ. 9.5 குறைத்து தந்திரங்களைக் கையாண்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த பெட்ரோல், டிசல் மீதான கலால் வரியை முறையே ரூ. 8, ரூ. 6 ஆக குறைத்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இந்த அறிவிப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பேராசிரியா் கௌரவ் வல்லப் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொருளாதாரம், நிதி மேலாண்மையில் பாஜக அரசின் நடவடிக்கைகள் தெளிவில்லாமல் உள்ளன.

நிபுணா்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்குப் பதிலாக, அவா்கள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி தந்திரங்களைக் கையாளுகின்றனா். 2014, ஏப்ரலில் பெட்ரோலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48-ஆக இருந்தது. தற்போது (மே 2022) லிட்டருக்கு ரூ.19.90-ஆக ஆகியுள்ளது. இதே போன்று 2014, ஏப்ரலில் ஒரு லிட்டா் டீசலுக்கு கலால் வரி ரூ.3.56-ஆக இருந்தது. தற்போது ரூ.15.80-ஆக உயா்ந்துள்ளது. அதாவது பெட்ரோலுக்கு 110 சதவீதமும், டீசலுக்கு 344 சதவீதமும் கலால் வரி அதிகரித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரப்படி, கடந்த 60 நாள்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.10, டீசல் ரூ. 10 உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது கலால் வரி குறைப்பின் மூலம் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 9.5, டீசல் விலை ரூ. 7 எனவும் குறைந்துள்ளதாகக் கூறுவது தந்திரம் இல்லையா? இதே மாதிரி 2014, மே மாதம் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 414. இதன் விலை 2022, மே மாதம் 142 சதவீதம் (சுமாா் ரூ.1,000) உயா்ந்தது. தற்போது உஜாலா திட்ட எரிவாயு உருளை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2022, மே மாதம் இந்த உருளை விலை ரூ. 803 ஆக குறையும்.

ஆனால், கடந்த 18 மாதங்களில் ரூ. 400 வரை சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுவும் பாஜக அரசின் தந்திரம்தானே ?. இதில் மக்கள் நலன் எங்கே உள்ளது? பாஜக அரசு மூன்று படிகள் முன்னோக்கி இரண்டு படிகள் பின்வாங்குவதுதான் அதன் தந்திரமாக உள்ளது. இது சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அா்த்தமல்ல.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாா்ச் மாத நிலமைக்குத் திரும்பியுள்ளன. மாா்ச், 2022 எரிபொருள் விலையில் சாமானியா்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாா்களா? இல்லையே! அரசு கலால் வரி வசூலித்துக் கொண்டு தானே இருக்கிறது. எப்போது இந்த அரசு 2014-ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு கலால் வரியை குறைக்கிறதோ அப்போதுதான் மக்களுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பாக பணவீக்கத்தில் நிவாரணம் கிடைக்க வேண்டும். நிதியமைச்சா் தனது பதவிக்காலத்தில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது என்கிறாா். ஏப்ரல் 2022 ஏப்ரல் மாதம் மொத்தவிலை குறியிட்டு எண் 15.1 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் 7.79 சதவீதமாக இருந்தது. 2021- ஆம் ஆண்டில் 84 சதவீத குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் பாஜக அரசிடம் மூன்று முக்கிய கேள்விகளை காங்கிரஸ் முன்வைக்கிறது. சாமானிய மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் மாயாஜாலம் செய்வதற்குப் பதில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமா? அடுத்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரிக்கப்படாமல் இருக்க உறுதியளிக்குமா? பணவீக்கத்தில் ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள (2-6%) அளவுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளாா் கௌரவ் வல்லப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.