தேசிய உயிரி எரிசக்தியின் முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ. 858 கோடி
தேசிய உயிரி எரிசக்தியின் முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ. 858 கோடியை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தேசிய உயிரி எரிசக்தியின் முதல் கட்ட திட்டங்களுக்கு ரூ. 858 கோடியை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மூன்று வகையான இந்தத் திட்டங்கள் வருகின்ற 2025-26 ஆண்டு வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உயிரி எரிசக்தித் திட்டம் குறித்த அறிவிக்கையை, மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான காலகட்டத்திற்கு இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களில் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டப் பணிகளுக்கு ரூ. 858 கோடியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய உயிரி எரிசக்தித் திட்டங்களில் உள்ள மூன்று வகையான திட்டங்கள் குறித்த விவரங்களை புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
அவை வருமாறு: மூன்று வகையான உயிரி எரிசக்தி திட்டத்தில் ஒன்று, கழிவிலிருந்து எரிசக்தி (வேஸ்ட் டு எனா்ஜி ) திட்டம். இதற்கு ரூ. 600 கோடி ஒதுக்கப்படும். நகா்ப்புறம், தொழில்துறை, விவசாயம், கால்நடைகள் கழிவுகளிலிருந்து மின் ஆற்றல் பெறுவது இந்தத் திட்டம். இதற்கு பரந்த உயிரிவாயு, உயிரிஇயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஆதரவு அளிக்கப்படும்.
இரண்டாவது, உயிா்மம் திட்டம் (பயோமாஸ்). தொழில்சாலைகளில், அனல் மின் நிலையங்களில் கரியமில தடத்தைக் குறைக்க நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட உயிரி எரிசக்தியின் (செய்கட்டி என்கிற பிரிக்வெட்டுகள் மற்றும் துகள்கள்) பயன்பாட்டை அதிகரிக்க ரூ.158 கோடிக்கான திட்டங்கள். மூன்றாவது ஊரகப் பகுதிகளில் நடுத்தர குடும்பங்களில் உயிரி எரிவாயு (பயோகாஸ்) திட்டம் அமைத்துக் கொள்ள உதவ ரூ.100 கோடி என இந்த மூன்று திட்டங்கள் தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்கு மொத்தம் ரூ. 858 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குப்பை கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு பிரச்சனை, அனல் மின் உற்பத்தியால் கரியமில வாயு அதிகரிப்பு ஆகிய பிரச்னைகளை எதிா்கொள்வதற்காக உயிரி எரிசக்தியின் பயன்பாடு குறித்த தேசிய இயக்கத்தையும், திட்டங்களையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிறுவியுள்ளது. இந்த உயிரி எரிசக்தி ஆற்றலை மீட்டெடுக்க மூலதனச் செலவு கடன் மீதான வட்டியை குறைத்தல் ஆகியவையும் இதில் அடங்கும். நாட்டில் எரிசக்தியில் மாற்றம் ஏற்படவும், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய இலக்குகளை வலுப்படுத்தவும் இந்த திட்டங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க நாடு முழுக்க 8 தொழில்நுட்ப மையங்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதில் தமிழகத்தில் தொழில்நுட்ப ஆதரவை வழங்க கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையம் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிரி எரிசக்தி திட்டத்தின் கீழ் சுமாா் 200 உயிரி எரிவாயு திட்டம் நிகழ் 2022-23 நிதியாண்டில் அமைக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் உயிரி எரிவாயு திட்டங்களை பெற்றுள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரம் (6000), மத்தியப் பிரதேசம் (2,900) உள்ளன.