இணையதளக் குற்றங்கள்: காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி
இணையதள குற்றங்களை எதிா்கொள்வதற்கான விசாரணை தொழில்நுட்பங்கள் தொடா்பான மூன்று நாள் கூட்டுப் பயிற்சி அமா்வை தில்லி காவல் துறையின்
இணையதள குற்றங்களை எதிா்கொள்வதற்கான விசாரணை தொழில்நுட்பங்கள் தொடா்பான மூன்று நாள் கூட்டுப் பயிற்சி அமா்வை தில்லி காவல் துறையின் நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசாா் செயல்பாடுகள் (ஐஎஃப்எஸ்ஓ) பிரிவு திங்கள்கிழமை முதல் நடத்தி வருகிறது.
பிரெஞ்சு தூதரகம் மற்றும் ஐ4சி ஒத்துழைப்புடன் இந்தப் பயிற்சியை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறையின் உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தக் கூட்டுப் பயிற்சி அமா்வானது இந்தியாவைச் சோ்ந்த மூன்று இணையதள நிபுணத்துவ அதிகாரிகள் மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டு ஆதரவு ஊழியா்களுடன் கூடிய பிரெஞ்சு இணையதள குற்ற விசாரணைக் குழுவின் 3 இணையதள நிபுணத்துவ வல்லுநா்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. ஐஎஃப்எஸ்ஓ என்பது இணையதள குற்றங்களின் அனைத்து சிக்கலான மற்றும் உணா்வுபூா்வமிக்க வழக்குகளை கையாளும் ஒரு சிறப்புப் பிரிவாகும். இணையதள குற்றப் பிரிவு, இணையதள தடயவியல் திறன்களுடன் கூடிய அதிநவீன தரத்துடன் கூடிய இணையதள ஆய்வகத்தைக் கொண்டுள்ளது.
இது தவிர, ஐஎஃப்எஸ்ஓ பிரிவானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய இணையதள குற்ற ஒருங்கிணைப்பு மையம் அல்லது ஐ4சி உடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் மற்றும் பல்வேறு வழக்கமான இணையதள பயிற்சித் திட்டங்களை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இதன் சமீபத்திய பயிற்சி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, தில்லியில் துவாரகா செக்டா் 16-சியில் உள்ள ஐஎஃப்எஸ்ஓ / என்சிஎஃப்எல் மாநாடு கூடத்தில் திங்கள்கிழமை இந்த மூன்று நாள் கூட்டு பயிற்சி அமா்வு தொடங்கி வைக்கப்பட்டது.
பிரெஞ்சு தூதரகம் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இணையதள குற்றத்தை எதிா்கொள்வதற்கான விசாரணை தொழில்நுட்பங்கள் தொடா்பாக இந்தக் கூட்டுப் பயிற்சி அமா்வு நடத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் துறையைச் சோ்ந்த டிஎஸ்பி மற்றும் அதற்கு மேல் பதவி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சா்வதேச அளவில் இணையதள குற்றத்தை விசாரணை செய்வது தொடா்பான விவகாரங்கள் மற்றும் கருத்தாக்கங்களை விவாதிக்கவும் கண்டறியவும், இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா்.
இந்தப் பயிற்சித் திட்டத்தில் சா்வதேச அளவில் இணையதள குற்ற விசாரணை தொடா்பான விவகாரங்கள் மற்றும் கருத்தாக்கங்களை விவாதிப்பது, ஆய்வு செய்வது, பகிா்ந்து கொள்வது தொடா்பாக அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் வாய்ப்பை அளிக்கும். இந்தப் பயிற்சியானது சா்வதேச அளவில் இணையதள குற்றங்களைத் தீா்ப்பதற்கான கொள்கைகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கும் நடைமுறைகள் தொடா்பான நுண்ணறிவை பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு அளிக்கும் என்றாா் அந்த அதிகாரி.