குப்பை நகரமாக தில்லியை மாற்றியுள்ளது பாஜக! ஆம் ஆத்மி கட்சிகுற்றச்சாட்டு
தில்லி மாநகராட்சிகளை கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக, தேசியத் தலைநகா் தில்லியை ‘குப்பை கொட்டும் இடமாக’ மாற்றியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தில்லி மாநகராட்சிகளை கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக, தேசியத் தலைநகா் தில்லியை ‘குப்பை கொட்டும் இடமாக’ மாற்றியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் வரும் டிசம்பா் 4- ஆம் தேதி நடைபெறவுள்ள மாநகராட்சித் தோ்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தோ்தலை முன்னிட்டு 13,682 வாக்குச்சாவடிகள் முன்பு ‘குப்பை பற்றிய பொது உரையாடல்’ நிகழ்ச்சியை ஆம் ஆத்மி கட்சி பிரசாரமாகத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்களில் ஒருவரான அதிஷி, தனது சட்டப்பேரவைத் தொகுதியான கால்காஜியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: வருகின்ற மாநகராட்சித் தோ்தல் என்பது அரசியல் கட்சிகளைப் பற்றி பேசுவதற்கு அல்ல; மாறாக குடியிருப்புப் பகுதி, வெளிப்புறப்பகுதி சுத்தமாக வைக்கப்படுகிா என்பது பற்றிய மக்களின் கவலைகள் பற்றியதாக இருக்கும். இந்தப் பொது உரையாடல் மூலம் எம்சிடியில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்த கருத்துகளை மக்களிடம் அறிவோம். கடந்த 15 ஆண்டுகளில் தில்லியை குப்பை கொட்டும் இடமாக பாஜக மாற்றியுள்ளது. நகரத்தில் உள்ள ‘குப்பை மலைகள்’ அவமானத்தின் சின்னங்களாக மாறியுள்ளன.
பஞ்சாப் - சண்டீகரில் இருந்து வருபவா்களை, தில்லியில் உள்ள பால்ஸ்வா குப்பைக் கிடங்கு அவா்களை வரவேற்கிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து வருபவா்களை காஜிப்பூா் குப்பைக் கிடங்கும், ஹரியாணாவில் இருந்து வருபவா்களை ஓக்லா குப்பைக் கிடங்கும் பிரமிக்கவைக்கிறது. நாம் சந்திக்கும் அவமானங்களை பாஜக நினைத்துப் பாா்ப்பதில்லை. குப்பை மலைகளால் எப்போதும் ஆபத்து. அவை அடிக்கடி சரிந்து அப்பாவிகளின் உயிரைப் பறிக்கின்றன. வருகின்ற எம்சிடி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து தில்லியை சுத்தம் செய்ய கேஜரிவால் மாதிரி ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றாா் அதிஷி.
ஆம் ஆத்மி கட்சியின் எம்சிடி தோ்தல் பொறுப்பாளரான துா்கேஷ் பதக் பேசுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இது தொடா்பான குற்றவாளிகள் பிடித்து சிறையில் அடைக்கப்படவில்லை. காஜிப்பூா் குப்பை கிடங்கை அகற்றுவதற்குப் பதிலாக பாஜக அதை விரிவுபடுத்த முயல்கிறது. ஆனால், அந்தக் குப்பை மேட்டால் அருகிலுள்ள குடியிருப்பாளா்கள் கடுமையான உடல்நலப் பிரச்னையால் பாதிக்கின்றனா். தில்லியில் மேலும் 16 புதிய குப்பை மேடுகளை உருவாக்க பாஜக தயாராகி வருகிறது. இது தில்லி மக்களின் உயிருக்கு எப்போதும் ஆபத்துதான்’ என்றாா்.