முகப்பு
புதுதில்லி

சிவப்புநிற வழித்தடத்தில் 8 பெட்டிகளுடன் ரயில் சேவை அறிமுகம்

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் உள்ள சிவப்பு நிற (ரெட் லைன்) வழித்தடத்தில் எட்டு பெட்டிகள் அடங்கிய இரண்டு ரயில்கள் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் உள்ள சிவப்பு நிற (ரெட் லைன்) வழித்தடத்தில் எட்டு பெட்டிகள் அடங்கிய இரண்டு ரயில்கள் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை எட்டு பெட்டிகளாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கான ரயில் சேவையை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிதாக அறிமுகம்: சிவப்பு நிற வழித்தடமானது தில்லியில் ரித்தாலா ரயில் நிலையத்தையும் காஜியாபாதில் உள்ள சஹீத் ஸ்தல் (புது பஸ் நிலையம்) ரயில் நிலையத்தையும் இணைக்கிறது. இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனஅதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சிவப்பு நிற வழித்தடத்தில் முதல் முறையாக எட்டு பெட்டிகள் அடங்கிய இரண்டு ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் 6 பெட்டிகள் கொண்ட 39 ரயில்களில் இருந்து இந்த இரண்டு ரயில்கள் எட்டு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு சேவைக்கு விடப்பட்டுள்ளன. இந்த பயணிகள் ரயில் சேவையானது செவ்வாய்க்கிழமை முதல் சிவப்பு நிற வழிதடத்தில் இருந்து சஹீத் ஸ்தல் (புது பஸ் நிலையம்) ரயில் நிலையத்திற்கு விடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு வசதி:இதைத் தொடா்ந்து, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் படிப்படியாக எட்டு பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம், ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். அதிக ப்பயணிகள் பயணம் செய்ய வாய்ப்பாகவும் இருக்கும். சிவப்புநிற வழித்தடத்தில் இயக்கப்படும் 6 பெட்டிகள் கொண்ட 39 ரயில்களில் கூடுதலாக 78 பெட்டிகள் இணைக்கப்படும். இந்தப் பெட்டிகள் பாரத் மூவா்ஸ் நிறுவனத்திடமிருந்து (பிஇஎம்எல்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பெட்டிகள் சிவப்புநிற முதலாவது வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் கொள்ளளவை அதிகரிக்கும். இந்த வழித்தடம் 2019-இல் சஹீத் ஸ்தல் நிலையத்திலிருந்து மொத்தம் 34 கிலோமீட்டா் தூரத்துடன் நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இந்த வழித்தடத்தில் எட்டு பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி 2024-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படக்கூடும். வழக்கமான பயணிகள் ரயில் சேவையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4.7 லட்சம் போ் பயணம்: சிவப்பு நிற வழித்தடம் டிஎம்ஆா்சி ஒருங்கிணைப்பில் மிகவும் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் தினமும் சுமாா் 4.7 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். இந்த வழித்தடத்தில் சந்திப்பு ரயில் நிலையங்களாக வெல்கம், கஷ்மீரி கேட், இந்தா்லோக் மற்றும் நேதாஜி சுபாஷ் பிளேஸ் ரயில் நிலையங்கள் தற்போது உள்ளன. மேலும், இரு ரயில் நிலையங்களாக பல்பகன்ஸ் மற்றும் பீதம்புரா ஆகியவை நான்காவது கட்ட ரயில் பணி முடிந்த பிறகு சந்திப்பு ரயில் நிலையங்களாக இந்த வழித்தடத்தில் அமைந்திருக்கும். கடந்த ஆண்டு மெட்ரோ ஒருங்கிணைப்பில் ஆறு ரயில் பெட்டிகளை எட்டு ரயில் பெட்டிகளாக மாற்றும் பணி மஞ்சள் நிற வழித்தடத்திலும், நீலநிற வழித்தடத்திலும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் உள்பட எஞ்சியுள்ள வழித்தடங்களிலும் ஆறு பெட்டிகள் வரை உள்ள ரயில்களை இயக்குவதற்கான வசதியைக் கொண்டுள்ளன. தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் முதலாவது ஆறு பெட்டிகள் ரயில் சேவையானது, கடந்த 2013- ஆம் ஆண்டில் சிவப்பு நிற வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தில்லி மெட்ரோவில் தற்போது 6 பெட்டிகள் கொண்ட 126 ரயில்கள், எட்டு பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் மற்றும் 4 பெட்டிகள் கொண்ட 22

ரயில்கள் என மொத்தம் 336 ரயில்கள் சேவையில் உள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.