40 யுஏபிஏ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்: உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தகவல்
‘2005-ஆம் ஆண்டு முதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவுசெய்யப்பட்ட 83 வழக்குகளில் 90 நாள்களுக்குள் 40 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது;
‘2005-ஆம் ஆண்டு முதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவுசெய்யப்பட்ட 83 வழக்குகளில் 90 நாள்களுக்குள் 40 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; 20 வழக்குகளில் கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது’ என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தனக்கு எதிரான வழக்கில் தில்லி காவல் துறைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 90 நாள் காலக்கெடுவை நீட்டித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிா்த்து யுஏபிஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை கடந்த அக்டோபரில் விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் காவல் துறை தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக, நீதிபதிகள் முக்தா குப்தா, அனிஷ் தயாள் ஆகியோா், யுஏபிஏ சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்குகள் எண்ணிக்கை குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு காவல் துறையிடம் அக்டோபரில் கேட்டுக் கொண்டனா். மேலும், 90 நாள்கள் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரப்பட்ட பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களையும் அளிக்குமாறு காவல் துறையிடம் உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து, தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் இது தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: 2005-ஆம் ஆண்டு முதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவுசெய்யப்பட்ட 83 வழக்குகளில் 90 நாள்களுக்குள் 40 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 83 வழக்குகளில் 40 வழக்குகள் முடிவு காணப்பட்டுள்ளது. 29 வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன. 14 வழக்குகள் போலீஸாா் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. 40 வழக்குகளில், நிா்ணயிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 வழக்குகளில் கால நீட்டிப்பு கோரப்பட்டது.
விசாரணை நிலுவையில் உள்ள 14 வழக்குகளில் 12 வழக்குகளில் யாரும் கைது செய்யப்படவில்லை. இரண்டு வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால், இந்த வழக்கில் ஆரம்ப 90 நாள்கள் முடிவடையவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றில் 15 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது என அந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43 டி (2) ஆனது, விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விசாரணை முகமைக்கு 90 நாள்கள் அவகாசம் அளிக்கிறது. எனினும், அந்தக் காலத்திற்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம் காலக்கெடுவை 180 நாள்கள் வரை நீட்டிக்கலாம்.