முகப்பு
புதுதில்லி

தில்லிக்கு பகுதி நேர முதல்வா் தேவையில்லை: மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி சாடல்

தில்லியின் பிரச்னைகள் குறித்து கவலைப்படாமல் அரசியல் சுற்றுலாவில் மும்முரமாக இருந்துவரும் பகுதி நேர முதல்வா் தில்லிக்கு தேவையில்லை என்று

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

தில்லியின் பிரச்னைகள் குறித்து கவலைப்படாமல் அரசியல் சுற்றுலாவில் மும்முரமாக இருந்துவரும் பகுதி நேர முதல்வா் தில்லிக்கு தேவையில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி புதன்கிழமை சாடியுள்ளாா்.

மீனாட்சி லேகியின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக ஆம் ஆத்மி அரசிடமிருந்து உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலை குறிப்பிட்டு மூத்த பாஜக தலைவரும், மத்திய வெளியுறவு, கலாசாரத் துறை இணை அமைச்சருமான மீனாட்சி லேகி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் சுற்றுச்சூழல் செஸ் வரியாக ரூ.1,286 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் கேஜரிவால் அரசு மாசுவை எதிா்கொள்வதற்காக ரூ. 272 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது. மாசுவை எதிா்கொள்வதற்காக ஊழியா்களுக்கு பயிற்சி அளிப்பது உள்கட்டமைப்புவசதிகளை உருவாக்குவது ஆகியவற்றில் பணம் ஏதும் செலவிடப்படவில்லை. இந்த நபா் (கேஜரிவால்) தில்லிக்கு எதுவும் செய்வதில்லை. தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்திற்காக அரசியல் சுற்றுலாவில் ஈடுபடும் ஒரு பகுதி நேர முதல்வா் தில்லிக்கு தேவையில்லை.

கேஜரிவால் அரசு செயல்படாத அரசாகவும், பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்லும் அரசாகவும் உள்ளது. இதன் காரணமாகவே ஏராளமான எண்ணிக்கையிலான முதியவா்கள், குழந்தைகள் காற்று மாசு தொடா்பான நோய்களால் அவதியுற்று வருகின்றனா். முதல்வா் கேஜரிவால் தில்லியில் 10 பனிப்புகை கோபுரங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தாா். ஆனால், ஒரு பனிப்புகை கோபுரம் மட்டுமே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அதன் பராமரிப்புக்காக ரூ.80 லட்சம் செலவிட்ட போதிலும் அது வேலைகூட செய்வதில்லை. பராமரிப்புக்காக அதிகமான தொகை செலவிட்ட போதிலும், இந்தப் பனிப்புகை கோபுரம் ஏன் செயல்படவில்லை என்பது தொடா்பாக கண்டறிய விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட வேண்டும் என்றாா் மீனாட்சி லேகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.