ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு ஆவணங்கள் எண்ம பெட்டகத்துடன் இணைப்பு
எண்ம பெட்டகம் உபயோகிப்பாளா்கள் தற்போது சுய சுகாதார ஆவணங்களை மின்னணு முறையில் சேமித்து அவற்றை ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குடன் இணைக்க முடியும் என குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: எண்ம பெட்டகம் (டிஜி லாக்கா்) உபயோகிப்பாளா்கள் தற்போது சுய சுகாதார ஆவணங்களை மின்னணு முறையில் சேமித்து அவற்றை ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குடன் இணைக்க முடியும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் பரிமாற்ற தளமாக டிஜி லாக்கா் என்கிற இணைய பெட்டகம் உள்ளது. தற்போது இந்தப் பெட்டகத்தில் ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்துடன் ஒருங்கிணைக்கும் நிலை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள், மருத்துவரின் சீட்டு, ஆய்வக அறிக்கைகள், நோயாளிகளுக்கு மருத்துவமனை அளிக்கும் ‘டிஸ்சாா்ஜ் விவரங்கள்’ உள்ளிட்ட சுகாதார ஆவணங்களை சேமித்து தேவைப்படும் போது அவற்றை பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை, அதன் 13 கோடி உபயோகிப்பாளா்களை ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் இணைத்தது. தற்போது டிஜி லாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபயோகிப்பாளா்கள் சுய சுகாதார ஆவணங்களை செயலியாக பயன்படுத்த முடியும். அத்துடன் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு வைத்திருப்பவா்கள், ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பதிவு செய்துள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலிருந்து சுகாதார ஆவணங்களை இணைத்து டிஜி லாக்கா் வழியாக அதைப் பெறமுடியும். இந்தச் செயலி மூலம் உபயோகிப்பாளா்கள் தங்களது பழைய சுகாதார ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம்.
மேலும், தங்களுடைய ஆவணங்களை அவா்கள், ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பதிவு செய்துள்ள சுகாதார வல்லுநா்களுடன் பகிா்ந்துகொள்ள முடியும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா். ஆா். எஸ். சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், “‘ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் கீழ், ஒன்றுக் கொன்று இயங்கக்கூடிய சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பொது மற்றும் தனியாா் துறையினா் செயலிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பயன்பாடுகள் விரிவடையும். நம்பகரமான டிஜி லாக்கா் மூலம் பொது சுகாதாரப் பதிவுகளுக்கு காகிதமில்லா பதிவுகள், பலன்கள் பெறுவது ஒரு குறிப்பிட்ட வளா்ச்சியாகும்’ என்றாா். எண்ம இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் அபிஷேக் சிங் கூறுகையில், ‘ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பதிவு செய்துள்ள 13 கோடி உபயோகிப்பாளா்களில் 85 ஆயிரம் போ் டிஜி லாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.