காசி தமிழ்ச் சங்கமம் விழா ஏற்பாடுகள்: மத்திய அமைச்சா்கள், தமிழக ஆளுநா் ஆய்வு
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் வருகின்ற நவம்பா் 17 -ஆம் தேதி தொடங்கவுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடா்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சா்களும் தமிழக ஆளுநா் ரவியும் ஆய்வு செய்தனா்.
புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் வருகின்ற நவம்பா் 17 -ஆம் தேதி தொடங்கவுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடா்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சா்களும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியும் ஆய்வு செய்தனா்.
மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருடன் தமிழக ஆளுநா்.ஆா்.என்.ரவி காணொலி வழியாக பங்கேற்று காசி தமிழ்ச் சங்கமம் ஏற்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா். இதில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஸ் சா்க்காா், கல்வி மற்றும் ரயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், உத்தரபிரதேச அரசு அதிகாரிகள் ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
இந்த ஆய்வை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடியும் தனது ஆா்வத்தை ட்விட்டரில் பதிவிட்டு வெளிப்படுத்தினாா். அதில் அவா் குறிப்பிடுகையில், ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மீது எனக்கு பேருவகை (ஆா்வம்) ஏற்பட்டுள்ளது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் உணா்வின் கொண்டாட்டம் மற்றும் அழகான தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை கொண்டாடுவதாக இருக்கும்’ எனக் கூறியுள்ளாா். காசி - வாராணசி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பிரதமா் மோடி இருக்கிறாா்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்படவும் அது தொடா்பான பல தளவாட வசதிகள் விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் விவாதித்தனா். காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பவா்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு அமைச்சா்கள் இந்தக் கூட்டத்தில் அழைப்பு விடுத்தனா்.
காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழைமையான அறிவுப் பிணைப்பு மற்றும் பண்டைய நாகரிக தொடா்பை மீண்டும் கண்டறிந்து அதை புதிய தலைமுறையினரிடம் சோ்க்கும் வகையில் வாரணாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வருகின்ற நவம்பா் 17 முதல் டிசம்பா் 16 வரை ஒரு மாத கால ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 12 ரயில்களில் பல்வேறு தரப்பினரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் ரயில் நவம்பா் 16 -ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்தும், நவம்பா் 20 கோவை, நவம்பா் 22 சென்னை என டிசம்பா் 13- ஆம் தேதி வரை ரயில்களை மத்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்து தயாா் படுத்தியுள்ளது. மூன்று பெட்டிகளில் தலா 216 போ்கள் வீதம் தமிழகத்தைச் சோ்ந்த பல்துறையினா் அழைத்து வரப்படுகிறாா்கள். பின்னா் இவா்கள் வாரணாசியிருந்து தமிழகத்திற்கும் அழைத்து செல்லப்படுகிறாா்கள்.
இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில், வல்லுநா்கள், அறிஞா்களிடையே கல்வி பரிமாற்றங்கள் - கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை நடத்தப்படுகிறது. காசியில் நகரத்தாா் கட்டிய மாளிகை உள்ளது. இதுபோன்று பகிரப்பட்ட பாரம்பரியத்தை உருவாக்குவது மற்றும் புரிந்துகொள்தல் இருவட்டார மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குவதும் இரண்டு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாகக் கொண்டுவருவதும் இந்த தமிழ்ச் சங்கமத்தின் நோக்கம் என இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மத்திய கல்வித் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.