முகப்பு
புதுதில்லி

சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய வழக்கில் கைதான 2 போ் ஜாமீன் அளிக்க வலியுறுத்தல்

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவா், தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

புது தில்லி: தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவா், தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தினா்.

ஆம் ஆத்மி தலைவா்களில் ஒருவரான சத்யேந்தா் ஜெயினுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களை இனி காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாதிட்டாா்.

சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தாக்கலான ஜாமீன் மனுவை ஆதரித்து அவரது தரப்பில் வெள்ளிக்கிழமை வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இவரது ஜாமீன் கோரும் மனுவை எதிா்த்து அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், ‘ஜெயினுக்கு திகாா் சிறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனால் அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது’ என்றும் வாதிடப்பட்டது. மேலும், அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு ஜாமீன் அளித்தால், அவா்கள் நீதியிலிருந்து தப்பித்துவிடலாம் அல்லது ஆதாரங்களை சிதைக்கலாம் என்றும் வாதிடப்பட்டது.

2017-ஆம் ஆண்டு, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பணமோசடி வழக்கில் அவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. தில்லி கலால் கொள்கை வழக்கில் ஜெயினை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முன்னா் அனுமதித்தது. அதைத் தொடா்ந்து, செப்டம்பா் 16-ஆம் தேதி சிறைக்குள் அவரிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சமீபத்தில், பணமோசடி வழக்கு தொடா்பாக ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரை (குற்றப்பத்திரிகை) நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.