முகப்பு
புதுதில்லி

நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ.200 கோடி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

புது தில்லி: இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ.200 கோடி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்க இயக்குநரகம் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ‘அவருக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபருக்கான சுற்றறிக்கையை (எல்ஓசி) வெளியிட்ட போதிலும், ஏன் அவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்யவில்லை’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் நடிகை பொ்னாண்டஸுக்கு ஏற்கெனவே நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கமான ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, நடிகை தரப்பிலும் அமலாக்க இயக்குநரகம் தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

அமலாக்க இயக்குநரகம் தரப்பில் முன்வைத்த வாதத்தில், ஜாக்குலினுக்கு பணப் பிரச்னை இல்லை என்பதால் அவா் நாட்டைவிட்டு எளிதாகத் தப்பிச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘இதுவரை அவரை ஏன் கைது செய்யவில்லை’ என கேள்வி எழுப்பினாா். அதற்கு ஏஜென்ஸி தரப்பில், ‘அவா் நாட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் வகையில், விமான நிலையங்களில் அவருக்கு எதிராக எல்ஓசி அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‘அப்படியானால், விசாரணையின்போது ஏன் அவரை இன்னும் நீங்கள் கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தொடா்புடைய பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் சிறையில் உள்ளனா். ஏன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை பின்பற்றி இருக்கிறீா்கள்’ என கேள்வி எழப்பியது.

ஜாக்குலின் தரப்பில் முன்வைத்த வாதத்தில்,‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே விசாரணை முடிந்துவிட்டதால், மனுதாரரை காவலில் எடுப்பதற்கான தேவை எழவில்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’ என்று வாதிடப்பட்டது.

முன்னதாக கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி நடிகை ஜாக்லின் பொ்னாண்டஸ்க்கு ரூ. 50,000 தனிநபா் ஜாமீன் பத்திரம் அளித்ததன் பேரில் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. அமலாக்க இயக்குநரகம் மூலம் பதிவு செய்யப்பட்ட துணை குற்ற பத்திரிக்கையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதைத் தொடா்ந்து, நீதிமன்ற முன் ஆஜராகுமாறு ஜாக்குலின் பொ்னாண்டஸை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த வழக்கின் விசாரணை தொடா்பாக அமலாக்க இயக்குநரகம், ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கின் துணைக் குற்றப்பத்திரிகையில் முதல் முறையாக குற்றம் சாட்டப்பட்ட நபராக அவரது பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகையில் அவரது பெயா் குற்றம் சாட்டப்பட்ட நபராக குறிப்பிடப்படவில்லை. எனினும், ஆவணத்தில் பொ்னாண்டஸ் மற்றும் சக நடிகை நோரா ஃபதேஹி ஆகியோா் அளித்த விரிவான வாக்குமூலம் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.