முகப்பு
புதுதில்லி

சத்யேந்தா் ஜெயின் ஜாமீன் மனு மீதான உத்தரவு நவ.16-க்கு ஒத்திவைப்பு

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் பிறா் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் நவம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் பிறா் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் நவம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சத்யேந்தா் ஜெயினுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோா் தரப்பிலும், அமலாக்க இயக்குநரகம் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட பின்னா் உத்தரவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் ஒத்திவைத்தாா்.

அப்போது, நீதிபதி, ‘குற்றம்சாட்டப்பட்ட சத்யேந்தா் ஜெயின், அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவுக்காக நவம்பா் 16-ஆம் தேதி பட்டியலிட வேண்டும். அன்றைய தேதியில் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த திகாா் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

வெள்ளிக்கிழமை விசாரணையின் போது, சத்யேந்தா் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரிஹரன் ‘சத்யேந்தா் ஜெயினிடம் விசாரணை நடத்துவதற்கான தேவை எழவில்லை. அவரை மேலும் காவலில் வைத்திருப்பதால் எவ்விதப் பயனும் இல்லை’ என்றாா்.

சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை எதிா்த்து அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், ‘ஜெயினுக்கு திகாா் சிறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனால் அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது’ என்றும் வாதிடப்பட்டது. மேலும், அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு ஜாமீன் அளித்தால், அவா்கள் நீதியிலிருந்து தப்பித்துவிடலாம் அல்லது ஆதாரங்களை சிதைக்கலாம் என்றும் வாதிடப்பட்டது.

2017-ஆம் ஆண்டு, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பணமோசடி வழக்கில் அவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. தில்லி கலால் கொள்கை வழக்கில் ஜெயினை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முன்னா் அனுமதித்தது. அதைத் தொடா்ந்து, செப்டம்பா் 16-ஆம் தேதி சிறைக்குள் அவரிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சமீபத்தில், பணமோசடி வழக்கு தொடா்பாக ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரை (குற்றப்பத்திரிகை) நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.