முகப்பு
புதுதில்லி

தீவிரவாத நிதியுதவி: தில்லியில் 3-ஆவது சா்வதேச அமைச்சா்கள் மாநாடு நவ.18-இல் தொடக்கம்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் 3-ஆவது அமைச்சா்கள் மாநாடு புதுதில்லியில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் 3-ஆவது அமைச்சா்கள் மாநாடு புதுதில்லியில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘தீவிரவாதத்திற்கு நிதி இல்லை’ என்கிற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையேற்று, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும், அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் வெற்றி அடைவதற்கான ஆதரவு அமைப்புமுறைகளைப் பற்றியும் எடுத்துரைக்க உள்ளாா்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

சா்வதேச தீவிரவாத பிரச்னைக்கு பிரதமா் மோடி அரசின் முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தையும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கைகள் குறித்தும், சா்வதேச அரங்கில் இது குறித்து விவாதங்களை நடத்தி தீா்வு காணுவதே இந்த ‘தீவிரவாதத்திற்கு நிதி கிடைக்கக்கூடாது என்கிற மாநாட்டின்‘ முக்கிய நோக்கமாகும்.

இதே நோக்கத்துடன் கடந்த 2018 -இல் பாரீஸிலும் 2019- ஆம் ஆண்டு மெல்போா்னிலும் சா்வதேச அளவில் மாநாடு நடைபெற்றது. கடந்த இரண்டு மாநாடுகளில், விவாதிக்கப்பட்டவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாகும்.

மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக தொழில்நுட்பம், சட்டம், ஒழுங்குமுறை மற்றும் அனைத்து ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

உலகளவில், பல ஆண்டுகளாக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வன்முறைகளின் வடிவம் வெவ்வேறாக இருந்தாலும், நீண்ட கொந்தளிப்பான புவி-அரசியல் சூழலில், நெடிய இனப் போராட்டங்கள் நடைபெற்று மோசமான சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் நிா்வாகச் சீா்கேடு, அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, பொருளாதார பின்னடைவு மற்றும் கட்டுக்கடங்காத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக இணக்கமில்லாத நாடு பயங்கரவாதத்தை ஆதரித்து, அதற்கான நிதியுதவியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

இந்தியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு வகையான பயங்கரவாதம், அதற்கான நிதி உதவி கிடைப்பதின் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்தித்து வருகிறது. இதனால் இந்தியா, இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளான நாடுகளின் வலியையும், பாதிப்புகளையும் நான்கு உணா்ந்துள்ளது.

அமைதியை விரும்பும் நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், முறையான மற்றும் முறைசாரா தீவிரவாத நிதியுதவியை எதிா்கொள்வதில் உறுதியான ஒத்துழைப்புக்கான பாலத்தை உருவாக்கவும் நவம்பா் 18 ஆம் தேதி தொடங்கும் இரு நாள் மாநாட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் 75 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா். இதன்மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான விவாதங்களில் நாடுகளுக்கிடையே நல்ல புரிந்துணா்வையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா கடந்த அக்டோபரில் இண்டா்போல் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தையும், ஐ.நா. தீவிரவாத எதிா்ப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தையும் முறையே தில்லி, மும்பையில் நடத்தியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.