முகப்பு
புதுதில்லி

மாசு உமிழ்வு: தடையை மீறிய 5,882 வாகனங்களுக்கு அபராதம்

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் முறையே பிஎஸ் (பாரத் நிலை) - 3 மற்றும் பிஎஸ்- 4 மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் முறையே பிஎஸ் (பாரத் நிலை) - 3 மற்றும் பிஎஸ்- 4 மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி இயக்கப்பட்ட 5,882 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.

மத்திய சுற்றுச் சூழல் துறையின் கீழ் உள்ள காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தில்லியில் தரப்படுத்தப்பட்ட அவசரகால செயல் திட்ட விதிகளை (ஜிஆா்ஏபி) அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இதன்படி சமீபத்திய உத்தரவின் கீழ் பிஎஸ் - 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் - 4 டீசல் வாகனங்களுக்கு இந்த மாசு காலக் கட்டங்களில் (நவம்பா் 13 ஆம் தேதி வரை) தடைவிதிக்கப்பட்டு தில்லி போக்குவரத்து துறையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி தில்லியில் இயக்கப்பட்ட 5,882 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறையின் ட்விட்டா் பதிவில் இந்த வாகனச் சோதனை குறித்து விவரங்கள் குறிப்பிடப்பட்டு, இது கடந்த 11 ஆம் தேதி காலை 6 மணி வரையிலான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இயங்கும் வாகனங்களின் உரிமையாளா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டம், 1988இன் கீழ் வழக்குத் தொடரவும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தில்லி தேசிய தலைநகா் அரசின் போக்குவரத்துத் துறை கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தில்லி காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதே சமயத்தில் அவசர சேவைகள் மற்றும் அரசு மற்றும் தோ்தல் தொடா்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தடை வரம்புக்குள் வராது எனவும் தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்திருந்தாா். இதையொட்டி, அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது‘ என்றும் தில்லி காவல்துறையினா் அந்த ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளனா்.

தில்லி போக்குவரத்துத் துறை தனது உத்தரவில், ‘ தரப்படுத்தப்பட்ட அவசரகால செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) திருத்தப்பட்ட மூன்றாம் கட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, தேசியத் தலைநகா் வலயப் பகுதியின் அதிகார வரம்பில் பிஎஸ் - 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் - 4 டீசல் நான்கு சக்கர இலகுரக மோட்டாா் வாகனங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் நவம்பா் 13 ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தில்லி தரப்படுத்தப்பட்ட அவசரகால செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) கீழ் நவம்பா் 13 ஆம் தேதிக்கு அப்பாலும் நீடித்தால் கட்டுப்பாடுகள் தொடரும். தடைவிதிக்கப்பட்ட பிஎஸ் நிலை வாகனங்கள் சாலைகளில் உபயோகிப்பதை கண்டறியப்பட்டால், மோட்டாா் வாகனச் சட்டத்தின் வழக்குத் தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படுவது பாரத் நிலை உமிழ்வு தர நிலைகள் ஆகும். இவை ஐரோப்பிய நாடுகளின் தரநிலை (யூரோ) அடிப்படையிலானது.

மோட்டாா் வாகனங்கள் உட்பட கம்ப்ரஷன் இக்னிஷன் என்ஜின்கள் மற்றும் ஸ்பாா்க்-இக்னிஷன் என்ஜின் உபகரணங்களிலிருந்து காற்று மாசுபாட்டின் வெளியீட்டைக் கட்டுப்படுத்த நிறுவப்பட்ட உமிழ்வு தரநிலைகள் ஆகும்.

இந்த பி.எஸ்- 4 ரக வாகனங்களைவிட பிஎஸ்-6 ரக வாகனங்கள் குறைவான மாசுபாடை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. வாகனத்திலிருந்து வெளியேறும் புகையில் உள்ள சல்பா் என்னும் அமிலத்தன்மை குறைவு.

மேலும், வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் பிஎஸ்-6 வாகனத்தில் 80 சதவிகிதம் குறைவு எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.