நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம்
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக இரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா். அதாவது, செப்டம்பா் 9, 2018 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரின் கருணை மனுக்களைப் பரிசீலித்து, அரசியலமைப்பின் 161-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா்களின் ஆயுள் தண்டனையைக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் பிறகு, அந்தப் பரிந்துரை அதே ஆண்டில் செப்டம்பா் 11-ஆம் தேதி தனித் தனியாக தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போதிலிருந்து அது அவரது அலுவலகத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
அரசியலமைப்புச்சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் ஒரு மாநிலத்தின் அமைச்சரவை வழங்கும் பரிந்துரை மற்றும் ஆலோசனைக்கு மாநில ஆளுநா் கட்டுப்பட்டவராகிறாா் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்புகளில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1981-இல் வழங்கப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான மாரு ராம் தொடா்ந்த வழக்கில் இது தொடா்பாக உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால், செப்டம்பா் 9, 2018 அன்று நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் பரிந்துரையானது சந்தேகத்திற்கு இடமின்றி, 1981-ஆம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி தமிழக ஆளுநரைக் கட்டுப்படுத்துகிறது. எனினும், ரிட் மனுதாரா்கள் (நளினி மற்றும் ரவிச்சந்திரன்) விடுதலையானது ஆளுநரின் ஒப்புதலின் பேரில் அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்த பின்னரே நிகழ முடியும்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் ஆளுநரின் அதிகாரம் மற்றும் குற்றங்களைக் கையாள்வதில் மாநில அரசின் அதிகாரம் தொடா்பான சட்டம் (ஐபிசி 302) மாநில அரசின் பிரத்யேக வரம்பிற்குள் வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க தகுதியான அதிகாரம் அமைச்சரவைக்குத்தான் உள்ளது. மேலும், செப்டம்பா் 9, 2018 தேதியிட்ட மாநில அமைச்சரவையின் முடிவே இறுதியானது. இதை அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி தமிழக ஆளுநா் செயல்படுத்த முடியும்.
மனுதாரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்யும் மாநில அரசின் பரிந்துரை செப்டம்பா் 11, 2018-ஆம் தேதி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அவரது அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்பட்டு, அதன் பிறகு அந்தப் பரிந்துரை இறுதியாக ஜனவரி 27, 2021-இல்தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஓரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்களாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூவா் விடுதலை கோரி மனு: இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் தொடா்புடைய ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுடன் தங்களை ஒரு தரப்பாக சோ்க்கக் கோரியும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்துள்ளனா். அவா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஹரிஷ் குமாா் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளாா்.
பின்னணி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன் (எ) ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகியோா் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனா். இந்த ஏழு பேரில் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளும் வகையில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறி, வழக்கு விசாரணையை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2014-இல் பேரறிவாளனின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அத்துடன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது முடிவு செய்வதில் தாமதம் செய்ததாகக் கூறி அவா்களின் தண்டனையும் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நளினியின் மரண தண்டனையானது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனையாக 2001-இல் குறைக்கப்பட்டது.