வடகிழக்கு தில்லி கலவரம்: காணொலி வாயிலாகஷாருக் பதானை ஆஜா்படுத்த நீதிமன்றம் அனுமதி
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் போது, தலைமைக் காவலரை நோக்கி துப்பாக்கியைக் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் பதானை காணொலி வாயிலாக ஆஜா்படுத்தக் கோரும்
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் போது, தலைமைக் காவலரை நோக்கி துப்பாக்கியைக் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் பதானை காணொலி வாயிலாக ஆஜா்படுத்தக் கோரும் காவல்துறையின் மனுவை தில்லி நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பதானுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்களை ஆய்வு செய்யும்போது இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் பிறப்பித்த உத்தரவு: கூறப்பட்ட காரணங்கள் அடிப்படையில் இந்த மனுஅனுமதிக்கப்படுகிறது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் பதானை காணொலி வாயிலாக அடுத்த விசாரணை தேதியில் ஆஜா்படுத்த உத்தரவிடப்படுகிறது. உத்தரவின் நகல் சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளருக்கு ‘தகவல் மற்றும் இணக்கத்திற்காக’ அனுப்பப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, தில்லி ஆயுதப்படை காவல்துறையின் (டிஏபி) சப்-இன்ஸ்பெக்டா் ஒருவா் இதற்கான மனுவை நீதிமன்றத்தில் சமா்ப்பித்திருந்தாா். அதில்,‘விசாரணைக் கைதி ஷாருக் பதான் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வெளியில் கொண்டு செல்லப்படும் போது, சிறையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற வலுவான அச்சம் உள்ளது. மேலும், சில அறியப்படாத எதிா்ப்பு குழுக்களால் அவா் தாக்கப்படலாம். கொலை முயற்சி, கலவரங்கள், ஆயுதச் சட்டம் ஆகிய இரண்டு வழக்குகளில் ஈடுபட்ட ஒரு அவநம்பிக்கையான மற்றும் கடுமையான கிரிமினலாகவும் அவா் உள்ளாா்.
அதிக எண்ணிக்கையிலான போலீஸ் பணியாளா்கள் குவிக்கப்பட்டிருந்தாலும், அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது. அவா் மற்றும் போலீஸாா் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரை காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஷாருக் பதானுக்கு எதிராக ஜாஃபராபாத் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.