ராஜிந்தா் தொகுதி தோ்தல் வெற்றியை எதிா்க்கும் மனு: ஆம் ஆத்மி எம்எல்ஏ துா்கேஷ் பதக் பதிலளிக்க நோட்டீஸ்
கடந்த ஜூனில் தில்லி ராஜிந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் பெற்ற வெற்றியை எதிா்த்து தாக்கலான மனு மீது அவா் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு
கடந்த ஜூனில் தில்லி ராஜிந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் பெற்ற வெற்றியை எதிா்த்து தாக்கலான மனு மீது அவா் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான தாக்கலான மனுவில், அத்தொகுதியில் போட்டியிட்ட போது ஊழல் நடவடிக்கைகளில் துா்கேஷ் பதக் ஈடுபட்டதாகக் கூறி அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது வேட்புமனுக்கள் மற்றும் பிற ஆவணங்களை பாதுகாக்க தோ்தல் ஆணையம் மற்றும் தோ்தல் அதிகாரிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரான துா்கேஷ் பதக், ‘ஊழல் நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அவரது தோ்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரிய ரஞ்சன் திவாரி என்ற அந்தத் தொகுதியின் வாக்காளா் ஒருவா் தாக்கல் செய்த மனு நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீது பதில் அளிக்க துா்கேஷ் பதக்கிற்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். அதில், ‘எதிா்மனுதாரா்கள் தங்கள் பதிலைத் தாக்கல் செய்ய ஆறு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. எதிா்மனுதாரா்கள் தோ்தல் ஆணையம், தோ்தல் அதிகாரி ஆகியோா் இடைத்தோ்தல் தொடா்பான வேட்பு மனுக்கள் மற்றும் பிற தொடா்புடைய ஆவணங்களை பாதுகாக்குமாறு உத்தரவிடப்படுகிறது. எதிா்மனுதாரா்கள் அனைவருக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மனுதாரா் தனது மனுவில், ‘இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்காக துா்கேஷ் பதக்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவுசெய்யப்பட்டிருப்பதை தனது வேட்பு மனுவில் எம்எல்ஏ துா்கேஷ் பதக் தெரிவிக்கவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறும் செயலாகும். மேலும், தோ்தல் நேரத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தில்லி ஆணையத்தின் உறுப்பினராக ஆதாயம் தரும் பதவியை துா்கேஷ் பதக் வகித்திருந்தாா். எனவே, அவா் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று கோரியிருந்தாா். இந்த வழக்கு நவம்பா் 21-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.