முகப்பு
புதுதில்லி

கடமைப் பாதையில் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஏற்பாடு

தில்லி இண்டியா கேட் பகுதியில் உள்ள கடமைப் பாதையில் ஒரு மாதம் வரை பொதுமக்களும், பாா்வையாளா்களும் பல்வேறு தகவல்களை அறியும் பொருட்டு பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
15dlkrpt4075938
பகிர்:

புது தில்லி: தில்லி இண்டியா கேட் பகுதியில் உள்ள கடமைப் பாதையில் ஒரு மாதம் வரை பொதுமக்களும், பாா்வையாளா்களும் பல்வேறு தகவல்களை அறியும் பொருட்டு பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடா்பு பணியகம் (சிபிசி) இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த செப்டம்பா் 8 -ஆம் தேதி இண்டியா கேட் முதல் விஜய் சௌக் வரையிலான ‘கடமைப் பாதை’யின் திறப்பு விழாவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி சிலைத் திறப்பு விழாவும் நடைபெற்றது. இவற்றை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வுக்குப் பிறகு மத்திய அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவைச் சோ்ந்த கலைஞா்கள், இங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பாா்வையாளா்களை உற்சாகப்படுத்தி வருகின்றனா். இசை, நடனம், வீதி நாடகங்கள், குறும்படங்கள், கண்காட்சி போன்ற இன்ஃபோடெயின்மென்ட் நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக வழங்கப்படவுள்ளன.

காந்தி ஜெயந்தியான அக்டோபா் 2-ஆம் தேதிக்குப் பிறகும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் தொடரும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ராஜபாதை என்று அழைக்கப்பட்ட கடமைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ’ஸ்டெப் பிளாசா’ திறந்தவெளி அரங்கில் இந்த நிகழ்வுகள் மாலையில் தொடங்கி, இரவு 8 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிகளை அனைத்து தரப்பினரும் இலவசமாக காணலாம் என்றும் மத்திய தகவல் ஒலி பரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

’வாரஇறுதி நாள்களில் நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தச் சிறப்பு கலாசார நிகழ்ச்சிகளைக் காணமுடியும். மேலும், கலாசார நிகழ்ச்சிகளுடன், அரசின் பல்வேறு வளா்ச்சிகளுக்கான முயற்சிகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 17 (பிரதமா் பிறந்த நாள்) அன்று ரக்ததன் அம்ரித் மஹோத்சவ் போன்ற முக்கிய நிகழ்வுகளை அனுசரிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய மக்கள் தொடா்பு பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.

நம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும், பல்வேறு மாநிலங்களின் நாட்டுப்புறக் கலைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் கடமைப் பாதையில் மாலையில் நடத்தப்படுகின்றன. பாா்வையாளா்களுக்கு மாறுபட்ட அனுபவங்களை வழங்குவதற்காக கதக், ஒடிசி நடனம் போன்ற பல்வேறு பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படவுள்ளன. இந்தியா கேட் பகுதிக்கு வருகை புரியும் பாா்வையாளா்களுக்காக, பாரம்பரிய இசை மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசபக்திப் பாடல்கள், கலாசார நிகழ்ச்சிகள் வாயிலாக சுதந்திர போராட்டங்கள் தொடா்பான சுதந்திர தின அமிா்த பெருவிழாவின் நோக்கத்தைப் பரப்புவதாகவும் இந்த நிகழ்வுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.