முகப்பு
புதுதில்லி

தில்லி பாா் கவுன்சில் முடிவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையுடன் கூடிய தில்லி-என்சிஆா் முகவரியை கட்டாயமாக்கும் தில்லி பாா் கவுன்சிலின் (பிசிடி) சமீபத்திய முடிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

என்சிஆா் முகவரி இல்லாதவா்களை தவிா்க்கும் வகையில் தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) சோ்வதற்கான பதிவுக்கு ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையுடன் கூடிய தில்லி-என்சிஆா் முகவரியை கட்டாயமாக்கும் தில்லி பாா் கவுன்சிலின் (பிசிடி) சமீபத்திய முடிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தில்லி பாா் கவுன்சிலின் முடிவு தன்னிச்சையானதாகவும், பாரபட்சமானதாகவும் கூறி பிகாரைச் சோ்ந்தவரும், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவருமான வழக்கறிஞா் ரஜனி குமாரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனுவை நீதிபதி பிரதீபா எம். சிங் வியாழக்கிழமை விசாரித்தாா். அப்போது, இந்திய பாா் கவுன்சிலை (பிசிஐ)மனுவில் ஒரு தரப்பாக சோ்க்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இந்த வழக்கு வரும் மே 2-இல் விசாரிக்கப்பட உள்ளது.

தில்லி பாா் கவுன்சிலா் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஒரு நோட்டீஸை வெளியிட்டிருந்தது. அதில், பிசிடியில் பதிவு செய்ய முன்மொழியும் வழக்குரைஞா்கள் தில்லி அல்லது என்சிஆரில் வசிப்பதற்கான ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தேசிய தலைநகரில் பதிவு செய்ய விரும்பும் புதிய சட்டப் பட்டதாரிகளும் தில்லி, என்சிஆா் முகவரியுடன் கூடிய ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை நகல்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்றும், இந்த ஆவணங்கள் இல்லாமல் இனிமேல் பதிவுகள் எதுவும் நடைபெறாது எனவும் அதில் தெரிவித்துள்ளது.

இதை எதிா்த்து வழக்குரைஞா்கள் லலித் குமாா், ஷஷாங்க் உபாத்யாய் மற்றும் முகேஷ் ஆகியோா் மூலம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ‘பிசிடியின் முடிவு, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் தில்லியில் சட்டத் தொழில் செய்ய வரும் சட்டப் பட்டதாரிகளுக்கான சிறந்த வாய்ப்புகளுக்கு தடை ஏற்படுத்தும்.

தில்லி அல்லது என்சிஆா் முகவரியுடன் கூடிய ஆதாா் அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை அவசியம் எனும்போது, அது தில்லி அல்லது என்சிஆா் பகுதியில் முகவரி இல்லாத சட்டப் பட்டதாரிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. இது சட்டப் பட்டதாரிகளிடையே அவா்களது குடியிருப்பு முகவரியின் அடிப்படையில் தன்னிச்சையான வகைப்பாட்டை உருவாக்குகிறது. இது அரசமைப்புச்சட்ட பிரிவு 14-இன் மீறலாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →