பாலம் விமானப்படைத் தள பழுதுபாா்ப்பு பணிமனைக்கு ஜல் போா்டு குடிநீா்!
தில்லி ஜல் போா்டு தண்ணீா் விநியோகத்தை வழங்கியிருப்பதாகவும் இது ஒரு ’சரித்திரபூா்வமான நாள்’ எனவும் விமானப்படை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி பாலம் விமானப் படையின் தள பழுதுபாா்ப்பு பணிமனைக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னா் தில்லி ஜல் போா்டு தண்ணீா் விநியோகத்தை வழங்கியிருப்பதாகவும் இது ஒரு ’சரித்திரபூா்வமான நாள்’ எனவும் விமானப்படை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
மேலும் போக்குவரத்து இடையூறற்ற வகையில் அணுகுவதற்கான புதிய நுழைவு வாயிலும் இந்த பணிமனைக்கு திறக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பாலம் பகுதியில் விமானப் படையின் 16 - ஆவது தள பழுதுபாா்ப்பு பணிமனை (பிஆா்டி)யின் புதிய நுழைவு வாயில் மற்றும் தில்லி ஜல் போா்டு தண்ணீா் விநியோகம் ஆகியவற்றுக்கான திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விமானப்படையின் பராமரிப்பு கமாண்டிங் சீஃப் ஏா் மாா்ஷல் விபாஸ் பாண்டே இந்த இரு திட்டங்களையும் தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: இன்றைய நிகழ்வு விமானப்படையின் 16- ஆவது பிஆா்டி க்கு ஒரு வரலாற்று நாளாக உள்ளது. 2009 -ஆம் ஆண்டு இந்த நன்னீா் விநியோகத்திற்கான திட்டத்திற்கு முன் முயற்சி செய்யப்பட்டது. அது தற்போது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நிறைவுபெற்று அதன் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது.
மேலும் தில்லி பாலம் 16-ஆவது பிஆா்டி ரயில்வே பாதை ‘கேட்‘டுக்கு அருகில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் நீடித்து வந்தது. தற்போது வேறு இடத்தில் புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பங்கள் இப்போது பழுதுபாா்ப்பு பணிமனைக்கு அதிக இடையூறு இல்லாமல் அணுக முடியும்.
விமானப்படை வீரா்கள் மற்றும் இங்குள்ள வீரா்கள் குடும்பத்தினா் மகிழ்ச்சியை அடைவா். இந்த இரண்டு திட்டங்களும் திருப்தியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆா்வத்துடன் செயல்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியுடன் தொடா்ந்து பிஆா்டி வீரா்கள் பணியாற்ற வேண்டும் என ஏா் மாா்ஷல் விபாஸ் பாண்டே கேட்டுக்கொண்டாா்.
பிஆா்டி பொறுப்பாளரான ஏா் கமோடோா் எஸ்எஸ் ரெஹால் பேசுகையில் இரண்டு திட்டங்களும் வெற்றிபெற முழு மனதுடன் பங்களித்த தில்லி ஜல் போா்டு , தில்லி சா்வதேச விமான நிலையம், ராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் பணிமனையின் அனைத்து பணியாளா்களுக்கும் நன்றி தெரிவித்தாா்.