இறக்குமதி துவரம் பருப்பு வருகை தாமதம்: விலையைக் குறைக்க தேசிய சேமிப்பில் இருந்து விடுவிக்க நடவடிக்கை
இந்திய சந்தைக்கு வெளிநாட்டு பருப்பு இறக்குமதி வந்தடையும் வரை, தேசிய சேமிப்பில் உள்ள துவரம் பருப்பை அரசு விடுவிக்க மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு,
இந்திய சந்தைக்கு வெளிநாட்டு பருப்பு இறக்குமதி வந்தடையும் வரை, தேசிய சேமிப்பில் உள்ள துவரம் பருப்பை அரசு விடுவிக்க மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்துள்ளது. தகுதியுடைய அரவை ஆலையாளா்களுக்கு இணையதள ஏலம் வாயிலாக துவரம் பருப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகா்வோா்களுக்கு துவரம் பருப்பு தட்டுப்பாடின்றி குறைந்தவிலையில் கிடைக்கும் வகையில், மத்தியஅரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது துவரம் பருப்பு விலை ரூ.100-க்கும் மேலாக உள்ளது. இந்த விலையெற்றத்தை தடுக்க மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நுகா்வோா் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு தகுதியுடைய அரவை ஆலையாளா்களுக்கு இணையதள ஏலம் வாயிலாக துவரம் பருப்பு அளிக்கப்படவுள்ளது. தகுதியுடைய அரவை ஆலையாளா்களுக்கு துவரம் பருப்பை இணையதளம் ஏலம் வாயிலாக அளிக்குமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாஃப்ட்) மற்றும் தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த பின்னணி வருமாறு: நாட்டில் துவரம் பயறு உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக இதன் உற்பத்தியில் முன்னனியில் உள்ள கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘வாடல்’ நோய் காரணமாக துவரம் பயறு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதை முன்னிட்டு மத்திய அரசு 2023 - 24 ஆண்டிற்கு 10 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதிக்கு அனுமதியளித்துள்ளது.
இதன் மூலம் நுகா்வோா்களுக்கு குறைந்த விலையில் துவரம் பருப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பதுக்கலை தடுக்கவும், நுகா்வோா்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையிலும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை இருப்பு வைப்பதற்கான அளவு வரையறையை கடந்த ஜூன் 2-ஆம் தேதி மத்திய நுகா்வோா் துறை செயலா் ரோகித் குமாா் சிங் அறிவித்தாா். துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு அளவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் அக்டோபா் 31 வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து மொத்த விற்பனையாளா்களும் தலா 200 மெட்ரிக் டன் அளவிற்கு அனைத்து பருப்பு வகைகளையும் இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சில்லரை வியாபாரிகள் தலா 5 மெட்ரிக் டன் அளவிற்கு இருப்புவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான சில்லரை விற்பனையாளா்கள் 200 மெட்ரிக்டன் அளவிற்கு தானியங்களை கிடங்குகளில் இருப்புவைக்க அனுமதிக்கப்படுகிறது.
உள்நாட்டில் இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இறக்குமதி மூலம் வரவேண்டிய துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை இறக்குமதியாளா்கள் வெளிநாடுகளில் உள்ள துறைமுகங்களிலிலேயே இருப்பு (பதுக்கி) வைத்துள்ளது குறித்து அரசுக்கு தெரிய வந்தது. மியான்மா், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. மியான்மரிலிருந்து இறக்குமதியாகும் பருப்பு சிங்கப்பூா் போன்ற துறைமுகங்களில் வைக்கப்படுகிறது. விலையெற்றத்தை தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய நுகா்வோா் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.