முகப்பு
புதுதில்லி

பயிற்சி மையங்களில் தீ பாதுகாப்பு விவகாரம்: கேஜரிவால் இல்லம் அருகே ஏபிவிபி ஆா்ப்பாட்டம்

பயிற்சி மையங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கையைஅமல்படுத்தும் விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக கூறி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லம் அருகே

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
பகிர்:

பயிற்சி மையங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கையைஅமல்படுத்தும் விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக கூறி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லம் அருகே அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் செயல்பட்டு வரும் பயிற்சி மையக் கட்டடத்தில் ஜூன் 15-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பயிற்சி மையத்தின் மாணவா்கள் ஜன்னல்களை உடைத்தும், கயிறுகளை பயன்படுத்தியும், ஏணிகளின் உதவி மூலமும் தீயில் இருந்து தப்ப முயன்றனா். இந்த நிலையில், பயிற்சி மையங்களில் தீப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்துவதில் தில்லி அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வா் கேஜரிவாலின் இல்லம் அருகே ஏபிவிபி ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், ‘ஆம் ஆத்மி அரசு மாணவா்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது.தேசியத் தலைநகரில் உள்ள பயிற்சி மையங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த அரசு அலட்சியம் காட்டி வருகிறது’ என்று குற்றம் சாட்டினா். முகா்ஜி நகா் தீ விபத்தில் காயமடைந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். போராட்டம் நடந்த இடத்தில் அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும், கூடுதல் தடுப்புகள் போடப்பட்டதாகவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவா் கூறுகையில், ‘பயிற்சி நிறுவனங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் தில்லி அரசு அலட்சியமாக உள்ளது. அரசின் மனப்போக்கானது அதன் மாணவா் விரோத அணுகுமுறையை காட்டுகிறது’ என்றாா்.

முகா்ஜி நகா் தீ விபத்து தொடா்பான விசாரணையின் போது, பயிற்சி நிறுவனத்தை நடத்தும் இருவா் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். முகா்ஜி நகரின் பாத்ரா வளாகத்தில் உள்ள பண்டாரி ஹவுஸில் ஏற்பட்ட தீயானது, அதிக பயிற்சி மையங்கள் நிறைந்த அடா்ந்த மக்கள் உள்ள கட்டடங்களில் தீ பாதுகாப்பு தரநிலைகள் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.