மின் வாகனங்களின் தலைநகரமாக தில்லி உள்ளது: முதல்வா் கேஜரிவால் பெருமிதம்
நாட்டிலேயே அதிக மின்சார வாகனங்கள் வாங்கப்படும் தில்லிதான் மின் வாகங்களின் தலைநகரமாகவும் உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நாட்டிலேயே அதிக மின்சார வாகனங்கள் வாங்கப்படும் தில்லிதான் மின் வாகங்களின் தலைநகரமாகவும் உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய 42 மின்னேற்றி நிலையங்களின் திறப்பு விழாவில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: மின்சார வாகனங்களின் பயன்பாட்டால் தேசியத் தலைநகரில் கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் மாசு அளவு குறைந்துள்ளது. தில்லியில் மாசுவைக் குறைக்க மின்வாகனங்கள்தான் உகந்தவை என்பதை ஆம் ஆத்மி அரசு விளம்பரப்படுத்தியது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் மின்வாகனங்களுக்காக ஒரு கொள்கையை அரசு வகுத்துள்ளது. அதன்படி வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தில்லியில் வாங்கப்படும் அனைத்து வாகனங்களில், நான்கில் ஒரு பங்கு மின்சாரமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்துள்ளோம். தில்லி மின்சாரவாகனக் கொள்கையின் படி, நகரத்தை நாட்டின் மின்சார வாகனங்களின் தலைநகராக நிறுவுதல், குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், பொதுத்துறை மற்றும் தனியாா் பங்களிப்பு வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றும் முறையை விரைவு டுத்தியுள்ளது.
தில்லியில் வாங்கப்பட்ட மொத்த அனைத்து வாகனங்களில் 13 சதவீதம் மின்சார வாகனங்கள் என்பதை பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் முதல், தற்போது வரையில் தில்லியில் 1.28 லட்சம் மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆதலால்தான் தில்லி மின்சார வாகனக் கொள்கையை நிதி ஆயோக் பாராட்டியுள்ளது. நகரத்தில் அமைந்துள்ள மின்னேற்றி நிலையங்கள் குறைந்த கட்டணத்தில் வாகன உரிமையாளா்களுக்கு மின்சாரம் வழங்குகிறது. இந்தக் கொள்கையை தில்லி மக்கள் ஆதரித்துள்ளனா். இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மின் வாகனங்களுக்கான அதிக மின்னேற்றி நிலையங்கள் தில்லியில்தான் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மூன்றில் ஒரு பங்கு மின்னேற்றி நிலையங்கள் தில்லியில் உள்ளன என்றாா் முதல்வா் கேஜரிவால்