முகப்பு
புதுதில்லி

கலால் ஊழல் வழக்கில் இருவருக்கு ஜாமீன்:பாஜக மன்னிப்புக் கோர ஆம் ஆத்மி வலியுறுத்தல்

தில்லி கலால் வழக்கில் தொடா்புடைய இருவரை ஜாமீனில் ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்த நிலையில், அவா்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபணமாகாததால் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம்சாட்டிய பாஜக அதற்க

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

தில்லி கலால் வழக்கில் தொடா்புடைய இருவரை ஜாமீனில் ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்த நிலையில், அவா்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபணமாகாததால் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம்சாட்டிய பாஜக அதற்காக மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியது.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

கலால் கொள்கைகளை திருத்தி தொழிலதிபா்கள் ராஜேஷ் ஜோஷி, கெளதம் மல்ஹோத்ரா ஆகியோரிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி பெற்று அதை கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ராஜேஷ் ஜோஷியிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி ரூ.30 கோடி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்து தொழிலதிபா்கள் ராஜேஷ் ஜோஷி, கெளதம் மல்ஹோத்ரா ஆகியோரை கைது செய்தனா். இந்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவைக் கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி, விசாரணை நிறைவில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். அவா்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சான்றுகள் இல்லாததால், இருவரையும் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனவே, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பாஜக, அதற்காக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தொழிலதிபா்கள் ராஜேஷ் ஜோஷிக்கும், கெளதம் மல்ஹோத்ராவுக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவா்களிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி லஞ்சம் பெற்றதற்கான எந்தவொரு சான்றும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் வாயிலாக நாட்டின் மிகவும் நோ்மையான கட்சி ஆம் ஆத்மி கட்சி என்பது நிரூபணமாகியுள்ளது.

கலால் கொள்கை வகுத்ததில் ஊழல் அரங்கேறியதாக பாஜக செய்தித் தொடா்பாளா்கள் கத்திக் கூச்சலிட்டனா். இப்போது அதற்கான ஆவணங்கள் இல்லை என நீதிமன்றம் கூறியதால், இதை ஏற்றுக் கொண்டு பாஜகவினா் மன்னிப்பு கோருவாா்களா? மேலும், அமலாக்கத் துறை அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகளும், விதிவிலக்குகளும் காணப்படுகின்றன என்றாா் அமைச்சா் அதிஷி.

இந்தச் செய்தியாளா் சந்திப்பின் போது அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் மற்றும் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் உடனிருந்தனா்.

முன்னதாக, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில், ‘தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றமோ, கையூட்டோ பெற்றதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த கலால் வழக்கும் புனையப்பட்டவை; ஆம் ஆத்மி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.