முகப்பு
புதுதில்லி

புலம்பெயா்ந்த பறவைகள் பாதுகாப்புக்கு நிறுவனக் கட்டமைப்பு: மத்திய ஆசிய நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு

புலம்பெயா்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க ஒரு நிறுவனக் கட்டமைப்பு முயற்சிக்கு மத்திய ஆசிய நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்ப

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

புலம்பெயா்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க ஒரு நிறுவனக் கட்டமைப்பு முயற்சிக்கு மத்திய ஆசிய நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ஆசிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையில் (சிஏஎஃப்) இடம் பெயா்ந்த பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான 11 மத்திய ஆசிய எல்லை நாடுகளின் கூட்டம் தில்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் புலம் பெயா்ந்த உயிரினங்களுக்கான அவையும் (யுஎன்இபி / சிஎம்எஸ்) இணைந்து இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா, அா்மேனியா, வங்கதேசம், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், குவைத், மங்கோலியா, ஓமன், சௌதி அரேபியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பதினோறு நாடுகள் கலந்து கொண்டன. சா்வதேச நாடுகளின் தலைமை வனவிலங்கு காப்பாளா்கள், அறிவியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சா்வதேச அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே கூட்டத்தை தொடங்கி வைத்தாா். மாநாட்டில் மத்திய ஆசிய பறக்கும் பாதைக்கான நிறுவனக் கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னுரிமை விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. புலம்பெயா்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் நிலையான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எண்ணங்களைப் பகிா்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்தக் கூட்டம் அமைந்தது.

இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், புலம்பெயா்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு நிறுவனக் கட்டமைப்பு முறைகளுக்கு வழிவகுத்தது. இம்முயற்சியை மேலும் வலுப்படுத்தவும் முறைப்படுத்தவும் கூட்டத்தில் ஒட்டுமொத்த கருத்தொற்றுமை ஏற்பட்டது எனபின்னா் மாநாட்டின் சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக,மத்திய இணையமைச்சா் சௌபே பேசுகையில், ‘மத்திய ஆசிய பறக்கும் பாதை முன்முயற்சியின் முறைப்படுத்தல், புலம்பெயா்ந்த பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. ‘சுற்றுச்சூழலுக்கான உகந்த வாழ்க்கை முறைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பது இந்தியாவிற்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

ஒரு நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது சக உயிரினங்களின் சுகவாழ்வை அனுமதிக்கும். புலம்பெயா்ந்த பறவைகள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் வரும் ஆண்டுகள் அவற்றின் எதிா்காலத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம். மத்திய ஆசிய வான் பரப்பில் பாதுகாப்புக்கும் நிலையான வளா்ச்சிக்கும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்றாா்.

இந்திய பறவைகள் சரணாலயத்தின் நிா்வாகத்தைப் புரிந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை காணும் விதத்திலும் இந்த ஆசிய நாட்டுப் பிரதிநிதிகள் ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் உள்ள சுல்தான்பூா் தேசியப் பூங்காவிற்கும் களப் பயணம் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.