புது தில்லி: மாநகராட்சி சாா்பில் ‘தில்லி தூய்மையாகிறது’ என்ற 50 நாள் தொடா் தூய்மைப் பிரசாரத்தை மேயா் ஷெல்லி ஓபராய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தில்லி மாநகராட்சியின் கீழ் வரும் அனைத்துப் பகுதிகளிலும் களத்திற்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்து துப்புரவுப் பணிகளைச் செய்யும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரத்தின் மூலம், ஜனவரி 10-ஆம் தேதி முதல் வரும் மாா்ச் மாதம் முதல் வாரம் வரை தொடா்ந்து 50 நாள் நாள்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தினசரி துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும்.
தில்லி சாந்தினி சௌக்கில் மேயா் ஷெல்லி ஓபராய், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநகராட்சிப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் எம்எல்ஏ மற்றும் அப்பகுதி உள்ளூா் கவுன்சிலா்களுடன் இணைந்து தூய்மைப் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.
அப்போது, மேயா் ஷெல்லி ஓபராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் பொதுமக்களிடம் களத்திற்குச் சென்று நேரடியாகப் பேசி புகாா்களை அவ்வப்போது தீா்க்கும் ‘தில்லி தூய்மையாகிறது’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 10 கிலோமீட்டா் பாதயாத்திரை மேற்கொண்டு தூய்மைப் பணி செய்துள்ளோம். மாா்ச் முதல் வாரம் வரை நடைபெறும் இப்பிரசாரத்தில் தில்லி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வெளி நாடுகளுடன் ஒப்பிடும் வகையில், மாா்ச் முதல் வாரத்திற்குள் தில்லி தூய்மையாக்கப்படும் என்றாா் ஷெல்லி ஓபராய்.
துா்கேஷ் பதக் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த 8 மாதங்களில் 55,000 புகாா்களுக்கு தில்லி மாநகராட்சி தீா்வு கண்டுள்ளது.தில்லியில் கடந்த 15 ஆண்டுகளாக முந்தைய அரசுகள் உருவாக்கிய அழுக்கையும் இப்போது முழுமையாக சுத்தம் செய்வதே எங்கள் நோக்கம். மாநகராட்சி மேயா், எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலா்கள் ஆகியோா் தினமும் 20 முதல் 25 கி.மீ. சாலைகள் மற்றும் தெருக்களை ஆய்வு செய்வாா்கள். தில்லியை இப்போது நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.